ஆண்டிப்பட்டியில் போதிய வகுப்பறை இல்லாததால்வேளாண்மை கட்டிடத்தை அரசு பள்ளிக்கு கொடுக்க வேண்டும்:கலெக்டரிடம், பெற்றோர்கள் மனு
ஆண்டிப்பட்டியில் போதிய வகுப்பறை இல்லாததால் வேளாண்மை துறை கட்டிடத்தை அரசு பள்ளிக்கு கொடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம், பெற்றோர்கள் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கினார். இதில் மொத்தம் 226 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
மேலும் இந்த கூட்டத்தின்போது, தூய்மை பணியாளர்கள் 11 பேருக்கு வடவீரநாயக்கன்பட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான உத்தரவுகளையும், ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலைக்கான உத்தரவையும் கலெக்டர் வழங்கினார்.
அரசு பெண்கள் பள்ளி
இந்த கூட்டத்தில் மனு கொடுக்க ஆண்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் பெற்றோர் சிலர் வந்தனர். கலெக்டர் ஷஜீவனாவிடம் அவர்கள் கொடுத்த மனுவில், 'ஆண்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,550 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் போதிய வகுப்பறை வசதி இல்லை. இதனால் மாணவிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பள்ளி அருகில் உள்ள வேளாண்மை துறை கட்டிடத்தை பள்ளியின் பயன்பாட்டுக்கு ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.
கூடலூரில் கடந்த 18-ந்தேதி ஊர்க்காவல் படைவீரர் நாகேந்திரன் கொலை செய்யப்பட்ட நிலையில், அவருடைய மனைவி தேவகனி மாவட்ட கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் எனக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
மாணவர்கள் மனு
வைகை அணை அருகே உள்ள முதலக்கம்பட்டியை சேர்ந்த முருகன் மகன்கள் ஜெயக்குமார், கோகுல் ஆகிய 2 பேரும் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அதில் ஜெயக்குமார் பிளஸ்-1, கோகுல் 10-ம் வகுப்பு படித்து வருகின்றனர். கலெக்டரிடம் அவர்கள் கொடுத்த மனுவில், 'எங்கள் தாயார் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
கடந்த மாதம் எங்கள் தந்தை முருகன் வாழை இலை அறுக்கும் வேலைக்கு சென்ற போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். தற்போது பாட்டியின் பராமரிப்பில் உள்ளோம். எங்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.