பராமரிப்பு இல்லாததால்புதர்மண்டி கிடக்கும் 18-ம் கால்வாய்


பராமரிப்பு இல்லாததால்புதர்மண்டி கிடக்கும் 18-ம் கால்வாய்
x
தினத்தந்தி 11 Sept 2023 12:15 AM IST (Updated: 11 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு இல்லாததால் 18-ம் கால்வாய் புதர்மண்டி காணப்படுகிறது.

தேனி

முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை உள்ள 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதேபோல் கம்பம் பள்ளதாக்கின் மேற்கு பகுதியான கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், போடி உள்ளிட்ட மானவாரி பகுதிகளில் பல ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் உள்ளன. இங்கு நிலத்தடி நீரை நம்பி காய்கறி, சோளம், கம்பு, நிலக்கடலை, மரவள்ளிக்கிழங்கு, தென்னை, வாழை உள்ளிட்ட விவசாயம் நடைபெறுகிறது.

இந்த பகுதியில் சரியாக மழை பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டதால் விவசாயம் பாதித்து நிலங்கள் தரிசாக மாறின. இந்த நிலையை மாற்ற கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 18-ம் கால்வாய் திட்டம் கொண்டு வரப்பட்டது. கூடலூர் முல்லைப்பெரியாறு வைரவன் கால்வாய் தலைமதகில் இருந்து ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தண்ணீர் திறந்துவிடப்படும். அந்த தண்ணீர் 18-ம் கால்வாய் மூலம் கொண்டுவரப்பட்டு அந்த பகுதியில் உள்ள 44 கண்மாய்களில் தேக்கி வைக்கப்படுகிறது.

இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிப்படைந்து வருகின்றன. இந்நிலையில் 18-ம் கால்வாயை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால் ஆங்காங்கே சேதமடைந்துள்ளன. மேலும் கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதற்கிடையே தற்போது குப்பைகளை கொட்டி வருவதால் வருங்காலங்களில் தண்ணீர் செல்வதில் சிக்கல் உள்ளது. இதனால் 18-ம் கால்வாய் சீரமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர். மேலும் கால்வாயில் குப்பைகள் கொட்டுபவர்கள் மீதும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story