நீர்வரத்து இல்லாததால் 59 அடியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம்


நீர்வரத்து இல்லாததால்  59 அடியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம்
x

நீர்வரத்து இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 59 அடியாக குறைந்தது

தேனி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக முழு கொள்ளளவில் நீடித்து வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அணைக்கு நீர்வரத்து இல்லாததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.

கடந்த ஒரு ஆண்டுக்கு பின்னர் தற்போது தான் வைகை அணை நீர்மட்டம் 60 அடிக்கும் கீழே குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழையும் இதுவரையில் போதுமான அளவு பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து இன்றி காணப்படுகிறது. அணையில் இருந்து இன்னும் 100 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் திறக்க வேண்டியுள்ளதால் நீர்மட்டம் மேலும் குறையும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 59.04 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லை. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 869 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது . ஒரு ஆண்டுக்கும் மேலாக நிரம்பிய நிலையில் காணப்பட்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது வேகமாக குறைந்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story