நீர்வரத்து இல்லாததால்மேகமலை அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை
நீர்வரத்து இல்லாததால் மேகமலை அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேகமலை அருவி
வருசநாடு அருகே கோம்பைத்தொழு கிராமத்தில் மேகமலை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு மேகமலை வனப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். கடந்த சில மாதங்களாக மேகமலை வனப்பகுதி, அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யவில்லை. அதன் காரணமாக அருவியில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
இதனால் நேற்று முன்தினம் மேகமலை அருவி முற்றிலுமாக வறண்டு போனது. தற்போது அருவியின் மேல் பகுதியில் மட்டும் லேசான அளவில் நீர்வரத்து உள்ளது. அந்த இடத்தில் இருந்து மேகமலை, குமணன்தொழு உள்ளிட்ட 4 ஊராட்சிகளை சேர்ந்த 52 கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது. எனவே அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மேல் பகுதிக்கு சென்று குடிநீரை மாசுபடுத்தும் அபாயம் நிலவியது.
சுற்றுலா பயணிகளுக்கு தடை
இதையடுத்து நீர்வரத்து ஏற்படும் வரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்க வேண்டும் என கோம்பைத்தொழு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். மேலும் அருவி அருகே உள்ள சோதனை சாவடியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று வாரவிடுறை என்பதால் அருவியில் குளித்து மகிழ ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அவர்களுக்கு வனத்துறையினர் அனுமதி அளிக்க மறுத்தனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தொடர்ந்து வனத்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.