குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி
திருப்பத்தூர் நகராட்சியில் குடிநீருடன், கழிவுநீர் கலந்து வருவதால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிநீருடன் கழிவு நீர்
திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீரில் சில பகுதிகளில் கழிவுநீர் கலந்து வருவதாக கூறப்படுகிறது. திருப்பத்தூர் ரெயில்வே ஸ்டேஷன் ரோட்டில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் உள்ளது.
இப்பகுதியில் கடந்த 3 நாட்களாக குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் தொடர்ந்து இதுபோன்று துர்நாற்றம் வீசியதால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் குடிநீர் தொட்டியை திறந்து பார்த்த போது அதில் கழிவுநீர் கலந்து, கருப்பு கலரில் இருந்தது.
பொதுமக்கள் கோரிக்கை
இதனால் வீட்டில் தொட்டியில் சேகரித்து வைத்திருந்த குடிநீரை பொதுமக்கள் வெளியேற்றினர். மேலும் இந்த குடிநீரை கடந்த 3 நாட்களாக குடித்து இருப்பதால் நோய் ஏதும் வந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
ரெயில்வே ஸ்டேஷன் ரோட்டில்தான் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை உள்ளது. இதனால் மருத்துவமனையில் இருந்து வெளிவரும் கழிவுநீர் அப்பகுதிக்கு வரும் குடிநீர் பைப்புகளில் கலக்கிறதா என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.