விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால்பெரியகுளத்தில் 2 அரசு பஸ்கள் ஜப்தி
விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் பெரியகுளத்தில் 2 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டது.
விபத்து இழப்பீடு
பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி நாகஜோதி (வயது 42). கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் இவர், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது பெரியகுளத்தில் இருந்து தேனி நோக்கி சென்ற அரசு பஸ் நாகஜோதி மீது மோதியது. இதில் நாகஜோதிக்கு 2 கால்களும் முறிந்தது. இதைத்தொடர்ந்து பெரியகுளம் மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் விபத்து நஷ்ட ஈடு வழங்க கோரி வழக்கு தொடர்ந்தார்.
வழக்ைக விசாரித்த கோா்ட்டு ரூ.7 லட்சத்து 40 ஆயிரம் விபத்து நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. ஆனால் இதுவரை நஷ்ட ஈடு தொகையை அரசு போக்குவரத்து கழகம் வழங்கவில்லை. இதனை தொடர்ந்து கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி கணேசன் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து நேற்று கோர்ட்டு அமீனா ரமேஷ் மற்றும் பாதிக்கப்பட்டவரின் வக்கீல் மாரியப்பன் ஆகியோர் பெரியகுளம் பஸ் நிலையத்தில் மதுரைக்கு செல்ல தயாராக இருந்த அரசு பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டுக்கு கொண்டு சென்றனர்.
அரசு பஸ் ஜப்தி
பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் மல்லையன் (26). கடந்த 2018-ம் ஆண்டு இவர், மோட்டார்சைக்கிளில் சென்றபோது பஸ் மோதியதில் மல்லையன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து விபத்து நஷ்ட ஈடு கோரி பெரியகுளம் கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விபத்தில் பாதிக்கப்பட்ட மல்லையனுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடாக வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்கவில்லை.
இதைத்தொடர்ந்து தாக்கல் செய்த நிறைவேற்றுதல் மனுவை விசாரித்த நீதிபதி கணேசன் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கோர்ட்டு பணியாளர்கள் பெரியகுளம் புதிய பஸ் நிலையத்தில் மதுரைக்கு செல்ல தயாராக இருந்த அரசு பஸ்சை ஜப்தி செய்தனர்.