அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால் வளர்ச்சி பணிகள் பாதிப்பு


அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால் வளர்ச்சி பணிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் நகரில் கந்துவட்டிபோல் வரி வசூலிக்கப்படுவதாகவும், அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதாகவும் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் நகரமன்ற கூட்டம் நேற்று மாலை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சித்திக்அலி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் மணவாளன், புல்லட்மணி, நந்தா நெடுஞ்செழியன், பத்மநாபன், நவநீதம் மணிகண்டன்,ஜனனிதங்கம், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கோல்டுசேகர், வக்கீல் ராதிகாசெந்தில், கோதண்டராமன், ஜெயப்பிரியா சக்திவேல், பா.ம.க. கவுன்சிலர் இளந்திரையன் உள்ளிட்டோர் பேசியதாவது:-

அ.தி.மு.க. வார்டு புறக்கணிப்பு

நகராட்சியுடன் புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்பே இல்லை. ஆனால் இருக்கிற மாதிரி வரிகட்ட சொல்லி நோட்டீசு வருகிறது. கந்துவட்டி வசூல் செய்வதுபோன்று அதிகாரிகள், மக்களை அச்சுறுத்துகிறார்கள். மாதந்தோறும் நகரமன்ற கூட்டம் நடத்த வேண்டும்.

விழுப்புரம் நகரில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை விரிவாக்க பணியின்போது அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டும்.

ஓராண்டாகியும் 1-வது வார்டில் குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி, அங்கன்வாடி, ரேஷன் கடை, கருமகாரிய கொட்டகை இப்படி எந்தவொரு அடிப்படை பணிகளும் செய்து தரப்படவில்லை. அ.தி.மு.க. வார்டு என்பதால் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது

இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.

அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை

கூட்டத்தில் கவுன்சிலர்கள் புருஷோத்தமன், ரியாஸ்அகமது உள்ளிட்டோர் பேசுகையில், ஆணையர் மற்றும் அதிகாரிகள், நகரமன்ற கவுன்சிலர்களுக்கு உரிய மரியாதை அளிப்பதில்லை. அதுபோல் மக்கள் பணிகளை செய்ய தலைவர் தயாராக இருக்கிற நிலையில் அவருக்கு ஆணையர் மற்றும் அதிகாரிகள் உரிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை. இதனால் வார்டுகளில் வளர்ச்சி பணிகள் மற்றும் மக்களுக்கான அடிப்படை பணிகள் தடைபடுகிறது என்று சரமாரியாக குற்றம்சாட்டினர்.

இதை கேட்டறிந்த நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, கவுன்சிலர்கள் தெரிவித்த அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் முகமது இம்ரான்கான், வடிவேல்பழனி, கலை, கோமதி பாஸ்கர், வித்தியசங்கரி பெரியார், மெரீனா சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நன்றி தீர்மானம்

முன்னதாக, நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் விழுப்புரம் நகராட்சியை சிறப்புநிலை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story