மழை காரணமாக குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு பொதுமக்கள் வருகை குறைவு


மழை காரணமாக குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு பொதுமக்கள் வருகை குறைவு
x

மழையின் காரணமாக புதுக்கோட்டையில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு பொதுமக்கள் வருகை குறைந்தது.

புதுக்கோட்டை

கூட்டம் குறைவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. தொடர்ந்து நேற்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் லேசாக மழை தூறியபடி இருந்தது. இந்த நிலையில் திங்கட்கிழமை தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனு பெற்றார்.

இந்த நிலையில் மழையின் காரணமாக குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு பொதுமக்கள் வருகை குறைவாக இருந்தது. ஒரு சிலரே வந்து தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். இதனால் மனுக்கள் பதிவு செய்யும் இடத்தில் கூட்டம் குறைவாக இருந்தது.

கைக்கடிகாரங்கள்

கூட்டத்தில் மொத்தம் 281 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், தலா ரூ.1,350 வீதம் 23 பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.31,050 மதிப்புடைய பிரெய்லி கைக்கடிகாரங்களை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கழிவறை வசதி ஏற்படுத்தப்படுமா?

திங்கட்கிழமை தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு பொதுமக்கள் வருகை சற்று அதிகமாக இருக்கும். இவர்களை பெரும்பாலும் கலெக்டர் அலுவலகத்தில் முன்பக்கம் உள்ள பிரதான நுழைவுவாயிலில் பலத்த சோதனை செய்து உள்ளே அனுப்புவது உண்டு. அங்கிருந்து சிறிது தூரம் நடந்து கலெக்டர் அலுவலக கட்டிடத்திற்கு வந்து மனுக்கள் பதிவு செய்து கூட்டரங்கில் மனுக்கள் அளிப்பது உண்டு. இவ்வாறு பொதுமக்கள் வந்து செல்லும் நேரத்தில் இயற்கை உபாதை கழிக்க பெரும் சிரமப்படுகின்றனர். அவர்கள் நுழைவு வாயிலில் இருந்து கட்டிடப்பகுதி வரை நடந்து வரக்கூடிய சாலையில் ஓரமாக உள்ள வனப்பகுதியில் மறைவான இடத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே கழிவறை வசதி இருந்தாலும், அதனை ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்த முடிகிறது. இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும்.‌ அல்லது திங்கட்கிழமை தோறும் நடமாடும் கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story