மளிகை பொருட்கள்-நெய் விலை உயர்வால் வீடுகளில் மணக்காத தீபாவளி பலகாரங்கள்
மளிகை பொருட்கள்-நெய் விலை உயர்வால் வீடுகளில் தீபாவளி பலகாரங்கள் செய்வதை தவிர்த்து பெரும்பாலானோர் கடைகளை நாடிவருகின்றனர்.
தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசுக்கு அடுத்தபடியாக இனிப்பு, பலகாரங்கள் தான் அனைவரது நினைவுக்கும் வரும். தித்திக்கும் தீபாவளி என்று பெயர் வருவதற்கு இவைதான் காரணம்.
தீபாவளிக்காக அதிரசம், சீடை, முருக்கு, தேன் குழல், குலோப் ஜாமுன், வடை உள்ளிட்ட பலகார வகைகளை தயாரித்து குடும்பத்தாருடன் அமர்ந்து சாப்பிடுவது குதூகலமாக இருக்கும்.
இதற்காக தீபாவளி வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே வீடுகளில் பலகாரம் செய்யும் மணம் மூக்கை துளைக்கும். "பக்கத்து வீட்டு ஆண்டி வீட்டில் தீபாவளிக்கு லட்டு, முருக்கு செய்யும் மணம் வீசுதம்மா...நீங்கள் எப்பா பலகாரம் செய்வீங்க..." என்று குழந்தைகள் தாயிடம் வந்து கேட்கும். அதற்கு அந்த தாய், "நாளை செய்து விடுவேன்கண்ணே..." என்று கூறுவதை கேட்க முடியும்.
இப்படி குழந்தைகள் ஆவலுடன், ஆசையுடன் எதிர்பார்க்கும் தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.
பண்டிகைக்கு பலகாரம் செய்ய தேவையான பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் நெய் போன்றவற்றின் விலை உயர்வு காரணமாக வீடுகளில் தீபாவளி பலகாரங்கள் செய்யும் மணம் இந்த ஆண்டு வீசவில்லை. இதனால் இனிப்பு கடைகளை இல்லத்தரசிகள் நாடும் நிலை ஏற்பட்டு உள்ளது.
எண்ணெய், பருப்பு வகைகள்
பண்டங்கள் செய்ய தேவையானவற்றில் ஒன்று எண்ணெய். நெல்லைைய பொறுத்தவரை நெல்லை டவுன் மொத்த விற்பனை கடைகளில் எண்ணெய் விலை ஏற்ற-இறக்கமாக உள்ளது.
எண்ணெய் வகைகளில் பாமாயில் விலை லிட்டருக்கு ரூ.150-ல் இருந்து ரூ.85 வரை சரிந்தது. தற்போது தீபாவளியையொட்டி ரூ.10 உயர்ந்து ரூ.95 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சூரிய காந்தி எண்ணெய் விலை தற்போது குறைந்து உள்ளது. 1 லிட்டர் ரூ.200-ல் இருந்து ரூ.150 ஆக குறைந்துள்ளது. தேங்காய் எண்ணெய் விலையும் ரூ.200-ல் இருந்து ரூ.150 ஆக குறைந்துள்ளது.
நல்லெண்ணெய் விலை ரூ.250-ல் இருந்து ரூ.300 ஆகவும், கடலை எண்ணெய் விலை ரூ.150-ல் இருந்து ரூ.200 ஆகவும் உயர்ந்து உள்ளது.
கடலை பருப்பு ரூ.62 ஆகவும், உருட்டு உளுத்தம் பருப்பு ரூ.120 ஆகவும், தொலி பருப்பு ரூ.100 ஆகவும் விலை நீடித்து வருகிறது.
துவரம் பருப்பு மட்டும் ரூ.100-ல் இருந்து ரூ.110 ஆக உயர்ந்துள்ளது. சில்லரை விற்பனை கடைகளில் இவற்றின் விலை சற்று அதிகமாக இருக்கும்.
இதுபோக பச்சரிசி மாவு ½ கிலோ பாக்கெட் விலை ரூ.25, கடலை மாவு நயம் ரூ.50, 2-வது தரம் ரூ.40, எள் கிலோ ரூ.200, ஓமம் ரூ.250, காயம் 100 கிராம் ரூ.60 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது.
நெய் விலை உயர்வு
இனிப்பு, பலகாரங்கள் செய்வதற்கு அத்தியாவசிய சேர்க்கை பொருட்களில் நெய் முக்கிய இடம் பிடித்து உள்ளது. மணம் வீசவும், மிருதுவாக இருக்கவும் நெய் சேர்க்கப்படுகிறது.
ஆனால், தற்போது நெய் விலை உயர்ந்துள்ளது. 1 லிட்டர் நெய் ரூ.100 வரை உயர்ந்துள்ளது. தற்போது ரூ.630 முதல் ரூ.650 வரை மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பலகாரம் செய்ய தேவையான பொருட்களின் விலை உயர்வு குறித்து பலர் கருத்து தெரிவித்து உள்ளனர். அது பற்றி இங்கு பார்க்கலாம்.
இல்லத்தரசி
ரெட்டியார்பட்டியை சேர்ந்த இல்லத்தரசி தீபா சங்கர்:-
தீபாவளி பண்டிகை அனைவரும் கோலாகலமாக கொண்டாடும் பண்டிகை. அந்த காலத்தில் கிராமங்களில் மக்கள் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். அப்போது தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்பே இனிப்பு, பலகாரங்கள் தயாரித்து சாப்பிடுவதற்கு தயார் ஆவார்கள். பரபரப்பாக இயங்குவதை பார்க்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கும்.
தற்போது நவீன காலத்தில் வேலை தேடியும், கல்விக்காகவும் நகர் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகிறார்கள். மேலும் ஒன்று அல்லது 2 குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்கிறார்கள். இது குடும்ப உறவு முறைகளை சுருக்கி விட்டது.
மேலும் நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. எனவே, தீபாவளி இனிப்பு, பலகாரங்களை வீட்டில் தயாரித்து சாப்பிடுவதை விட, தேவையான அளவுக்கு கடைகளில் வாங்கி கொள்கிறோம்.
வியாபாரி
நெல்லை டவுன் மொத்த விற்பனை கடை வியாபாரி சோமசுந்தரம்:-
பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது. இதே போல் தேங்காய் விளைச்சல் அதிகரிப்பால், விவசாயிகள் தங்களது தேங்காய்களை கொப்பரையாக மாற்றி, அவர்களே எண்ணெய் ஆட்டி எடுத்து பயன்படுத்துகிறார்கள். இதுவும் விலை குறைவுக்கு காரணம் ஆகும்.
கடலை எண்ணெய், நல்லெண்ணெய்க்கு தேவையான வேர்க்கடலை, எள் ஆகியவை விளைச்சல் இல்லாததால் விலை உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு பெண்கள் வந்து பொருட்கள் வாங்குவது குறைந்து உள்ளது. ஓட்டல் மற்றும் இனிப்பு, பலகார கடைக்காரர்கள் வருகை அதிகரித்து உள்ளது.
பண்டிகை கால விலையேற்றம்
தூத்துக்குடியை சேர்ந்த சாலமோன் ராஜா:-
அத்தியாவசிய பொருட்களின் விலை அவ்வப்போது அதிகரிப்பதால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பருப்பு விலை கடுமையாக அதிகரித்தது. அப்போது ஓட்டல்களில் வடை உள்ளிட்ட பலகாரங்களின் விலை அதிகரித்தது. அதன்பிறகு படிப்படியாக விலை குறைய தொடங்கியது.
தற்போது தீபாவளி நேரத்தில் மீண்டும் விலை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இது போன்ற பண்டிகை காலத்தில் விலையேற்றம் என்பது மக்களை வெகுவாக பாதிக்கிறது. ஓட்டல்களில் வடை தயாரித்து விற்பனை செய்வதற்கு எண்ணெய், பருப்பு அத்தியாவசியமாகிறது. இதன் விலை அதிகரிக்கும் போது, தொழிலில் நஷ்டம் ஏற்படும் நிலை உருவாகி விடுகிறது. இதனால் ஏழை, எளிய மக்களின் நலன் கருதி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிடுகிடு உயர்வு
தூத்துக்குடியை சேர்ந்த என்.ஈனமுத்தம்மாள்:-
தீபாவளி என்றால் பலகாரங்கள் முக்கிய இடத்தை பிடிக்கும். ஒரு வாரத்துக்கு முன்பே தீபாவளி பலகாரங்கள் வீட்டில் தயாராக தொடங்கி விடும். இப்படிப்பட்ட நேரத்தில் கிடுகிடுவென எண்ணெய், பருப்பு விலையை உயர்த்தி விடுகிறார்கள். இதனால் பலகாரங்கள் செய்யவா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போதே தீபாவளி வந்து விடுகிறது. இதனால் கடைகளிலேயே பலகாரங்களை வாங்கி சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.
தீபாவளி நேரத்தில் எண்ணெய் விலை உயர்வு என்பது நடுத்தர மக்களை வாட்டி வதைக்கும் செயலாக அமையும். கடைகளிலும் பலகாரங்களின் விலை அதிகரித்து விடுகிறது. ஆனாலும் வேறு வழி இல்லாமல் அதனை வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். ரேஷன் கடைகளில் தீபாவளி நேரத்தில் கூடுதலாக பருப்பு, எண்ணெய் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்களை பாதிக்கிறது
தென்காசி கன்னி மாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த மகாராணி:-
நாங்கள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். பொதுவாக விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக பலசரக்கு பொருட்களில் தற்போது பருப்பு விலை உயர்ந்துள்ளது. கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாசிப்பருப்பு உள்ளிட்ட அனைத்து பருப்புகளின் விலையும் உயர்ந்துள்ளது.
இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை வருகிறது. பலகாரங்கள் செய்வதற்கு பருப்பு வாங்க வேண்டும். இந்த நிலையில் பருப்புகளின் விலை உயர்வு எங்களை பாதிக்கிறது. இதுகுறித்து கடைகளில் கேட்கும்போது அனைத்து பொருட்கள் மீதும் ஜி.எஸ்.டி. வரி போடப்படுகிறது, இதனால் விலை உயர்ந்து உள்ளது என்று கூறுகிறார்கள். அரசு வரிகளை அத்தியாவசிய பொருட்களின் மீது போடும்போது அது எங்களுக்கு சுமை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு கூறினர்.