தோட்டத்தில் தேங்கிய தண்ணீர் வடியாததால் வாழை அழுகும் அபாயம்
தொடர் மழையால் வாழை தோட்டத்தில் தேங்கிய தண்ணீர் வடியாததால் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால்நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
திருவெண்காடு:
தொடர் மழையால் வாழை தோட்டத்தில் தேங்கிய தண்ணீர் வடியாததால் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால்நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கியது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.இந்த மழையின் காரணமாக ஆறு, வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் அதிக அளவில் ஓடுகிறது. தொடர் மழையால் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் மூழ்கி அழுகும் அபாய நிலையில் உள்ளது.
வாழை தோட்டத்தில் தேங்கிய தண்ணீர்
செம்பனார்கோவில் அருகே உள்ள கிடாரங்கொண்டான், கீழையூர், புஞ்சை, ராதா நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100 ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.தொடர் மழையால் வாழை சாகுபடி செய்யப்பட்ட தோட்டத்தில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. வாழை தோட்டத்தில் தேங்கிய மழைநீர் வடியாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நிவாரணம் வழங்க வேண்டும்
இதுகுறித்து வாழை விவசாயிகள் கூறுகையில், ஒரு ஆண்டு கால பயிரான வாழைப்பயிர் மேற்கண்ட பகுதியில் நீண்ட காலமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது பூவன், ரஸ்தாலி, மொந்தன் ஆகிய ரக வாழை பயிரிடப்பட்டுள்ளன.தொடர் மழையால் வாழை தோட்டத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் வாழை கன்றுகள் அழுகி நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே தோட்டக்கலை துறையினர் பாதிக்கப்பட்டுள்ள வாழை பயிரை கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.