ஈரோட்டில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்ததால் வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன


ஈரோட்டில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்ததால் வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன
x
தினத்தந்தி 5 Jun 2023 2:30 AM IST (Updated: 5 Jun 2023 6:54 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்ததால் 3 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து நாசமடைந்தன. வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன.

ஈரோடு

ஈரோட்டில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்ததால் 3 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து நாசமடைந்தன. வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன.

சூறாவளிக்காற்று

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும், வெயிலின் தாக்கம் குறையவில்லை. ஈரோட்டில் நேற்று முன்தினம் பகலிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

இந்தநிலையில் இரவில் திடீரென பலத்த காற்று வீச தொடங்கியது. அப்போது இடி-மின்னலின் தாக்கம் அதிகமாக இருந்தது. தொடர்ந்து சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது.

அப்போது காற்றில் புழுதி பறந்ததால், சாலைகளில் நடந்து சென்ற மக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். வெண்டிபாளையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் பழுது ஏற்பட்டதால், சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. நள்ளிரவில் 3 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

வாழை மரங்கள்

ஈரோடு அருகே வாய்க்கால்மேடு கருக்கம்பாளையம் பகுதியில் வீசிய சூறாவளிக்காற்று காரணமாக குழந்தைசாமி, கந்தசாமி ஆகிய விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த சுமார் 3 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதமானது. அதே பகுதியில் சின்னப்பன் என்பவருக்கு சொந்தமான 20 வீடுகளில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வாடகைக்கு தங்கி உள்ளனர். அதில் உள்ள 15 வீடுகளில் சிமெண்டு ஓடுகளால் போடப்பட்டு இருந்த மேற்கூரைகள் சூறாவளிக்காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாமல் பெயர்ந்து தூக்கி வீசப்பட்டன. இதனால் அந்த வீடுகளில் தங்கி இருந்தவர்கள் இரவு முழுவதும் தங்குவதற்கு இடமின்றி தவித்தனர். பெருந்துறைரோடு, ரிங்ரோடு, ரங்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் வைக்கப்பட்டு இருந்த விளம்பர தட்டிகள் சேதமடைந்தன. பெருந்துறைரோடு கூரப்பாளையம், வாய்க்கால்மேடு உள்ளிட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சரிந்து விழுந்தன. இதனால் கிராமங்களுக்கு செல்லும் சாலைகளில் போக்குவரத்து தடைபட்டது. கூரப்பாளையத்தில் உள்ள கடையின் மேற்கூரை சேதமடைந்ததால் கிரேன் உதவியுடன் சரிசெய்யப்பட்டது.

மழை அளவு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பெருந்துறை - 45

பவானி - 31.6

அம்மாபேட்டை - 30

சென்னிமலை - 25.6

ஈரோடு - 2


Next Story