கழிவுநீர், குப்பைகள் சேருவதால் கூவமாக மாறும் குடகனாறு
குடகனாற்றை பாதுகாக்க வேண்டும் என்பது விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுபற்றி விவசாயிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
உருண்டோடும் கார்மேகங்கள் ஓரிடத்தில் திரண்டு காதலென காத்திருக்க, குளிர் காற்றின் தழுவலில் துளி, துளியாக நீர்த்திவலைகள் உருவாகின்றன. அவை வான் மழையாக பொழிந்து பூமி பந்தை குளிர்விக்கிறது.
ஆறுகள்
மலையோ, வனமோ, தரிசு நிலமோ இவற்றில் எதில் விழுந்தாலும் மழைத்துளிகள் ஒன்று சேருகின்றன. துளிகளாக சிதறி விழுந்தாலும் நொடிப்பொதில் ஒன்று சேர்ந்து சிறு, சிறு ஓடைகளாக மாறி பின்னர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்வதற்கு, ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருப்பவை ஆறுகள்.
மேட்டு நிலத்தை கரைத்து பள்ளத்தை நிரப்பி எல்லாம் சமம் என உணர்த்துபவை ஆறுகள். தரிசாக காய்ந்து கிடக்கும் நிலத்தையும் வளமான பூமியாக மாற்றும் வல்லமை கொண்டவை. யாரும் வரலாம், அள்ளி பருகலாம் என்று வரமாக அமைந்த ஆறுகளே நாம் வாழ்வதற்கு முக்கிய ஆதாரமாக இருக்கின்றன.
குடகனாறு
உலக உயிர்களின் வாழ்வாதாரமாக திகழும் ஆறுகள் நிறைந்த மாவட்டங்களில் திண்டுக்கல்லும் ஒன்றாகும். அந்த வகையில் கொடைக்கானல் தாலுகா தாண்டிக்குடி பகுதியில் உயர்ந்து நிற்கும் மலைத்தொடரில் குடகனாறு உற்பத்தியாகிறது.
அங்கிருந்து பயணத்தை தொடங்கும் இந்த ஆறு ஆத்தூர், அனுமந்தராயன்கோட்டை, பாலம்ராஜக்காபட்டி, வேடசந்தூர் வழியாக சுமார் 100 கி.மீ. தூரம் ஓடி கரூரில், அமராவதி ஆற்றில் கலக்கிறது. இந்த குடகனாறு காமராஜர் அணை, 20-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள், வேடசந்தூர் அழகாபுரி குடகனாறு அணை ஆகியவற்றை கடந்து அமராவதியில் சேருகிறது.
விவசாயம், குடிநீர்
இந்த குடகனாறு செல்லும் வழியில் சிறிய, பெரியவை என 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் விவசாயம், குடிநீர், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றின் முக்கிய ஆதாரமே குடகனாறு தான். குடகனாற்றில் தண்ணீர் ஓடும் போது திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து விடுகிறது.
இதேபோல் அழகாபுரி அணையில் தண்ணீர் தேக்குவதால் வேடசந்தூர், குஜிலியம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. மேலும் ஏராளமான குளங்களுக்கு தண்ணீர் வருகிறது. குடகனாறு மூலம் 1,600 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கழிவுநீர், குப்பைகள்
இத்தனை சிறப்புமிக்க குடகனாற்றை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. ஆனால் ஒருசில பகுதிகளில் குடகனாற்றை குப்பைகள் கொட்டும் இடமாக பயன்படுத்துகின்றனர். அதோடு தொழிற்சாலைகளின் கழிவுநீரும் பல இடங்களில் குடகனாற்றில் திறந்து விடப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் கோடைகாலத்திலும் குடகனாற்றில் கழிவுநீர் வற்றாமல் ஓடுகிறது. தாண்டிக்குடியில் தூய்மையான தண்ணீராக தொடங்கும் குடகனாறு கழிவுநீர் கலப்பதால், வேடசந்தூர் அணைக்கு பச்சை நிறத்தில் வந்து சேருகிறது.
திண்டுக்கல், கரூர் இருமாவட்டங்களில் விவசாயம், குடிநீர் மற்றும் கால்நடை வளர்ப்புக்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் குடகனாற்றை பாதுகாக்க வேண்டும் என்பது விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுபற்றி விவசாயிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
கூவமாக மாறும் அபாயம்
குடகனாறு பாதுகாப்பு சங்க தலைவர் ராமசாமி (வேடசந்தூர்) :- குடகனாற்றின் கரைகளில் பல இடங்களில் குப்பைகள் கொட்டி குவிக்கப்படுகின்றன. இதேபோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர், குடியிருப்புகளின் கழிவுநீர் ஆகியவையும் குடகனாற்றில் கலக்கின்றன. மழை பெய்துவிட்டால் தொழிற்சாலைகளில் தேக்கி வைக்கப்படும் கழிவுநீர் ஆற்றில் அதிக அளவில் திறந்து விடப்படுகின்றன. இதனால் குடகனாறு கூவமாக மாறிவருகிறது.
குடகனாற்றில் ஓடும் தண்ணீர் மட்டுமின்றி வேடசந்தூர் பகுதியில் நிலத்தடி நீரிலும் உப்புதன்மை அதிகரித்துவிட்டது. நிலத்தடி நீரை யாரும் அப்படியே குடிநீராக பயன்படுத்துவது இல்லை. ஆற்றில் குளிக்கும் மக்களுக்கு தோலில் அரிப்பு ஏற்படுகிறது.
எனவே குடகனாற்றில் கழிவுநீர் கலப்பதை உடனடியாக தடுக்க வேண்டும். அதை செய்ய தவறினால் எதிர்காலத்தில் குடகனாற்றிலும் கூவம் போன்று கழிவுநீர் தான் ஓடும். விவசாயம், கால்நடை வளர்ப்பு அழிந்து விடும். மேலும் குடகனாறு தண்ணீர் பிரச்சினை தொடர்பான வல்லுனர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும்.
தோல் கழிவுநீர்
வேடசந்தூர் வட்டார விவசாயிகள் நலச்சங்க பொருளாளர் செல்வன்:- குடகனாற்றில் திண்டுக்கல் மாநகராட்சியின் பாதாள சாக்கடை கழிவுநீர், தோல் கழிவுநீர், நூற்பாலை மற்றும் இதர தொழிற்சாலை கழிவுநீர் என ஒவ்வொரு பகுதியை கடக்கும் போதும் கழிவுநீர் கலக்கிறது. இதனால் குடகனாற்றின் தண்ணீர் குடிக்க முடியாத அளவுக்கு பச்சை நிறமாக அழகாபுரி அணைக்கு வருகிறது. ஓசூருக்கு அடுத்தப்படியாக அழகாபுரி அணையில் கலக்கும் குடகனாறு தண்ணீரில் தான் அதிகப்படியாக உப்பு உள்ளது.
இதை தடுக்காவிட்டால் விவசாயம் அழிந்து போவதோடு, கால்நடை வளர்ப்பும் முற்றிலும் ஒழிந்து போகும். மேலும் குடகனாறு முழுவதும் சீமை கருவேல மரங்கள் காடு போன்று வளர்ந்து விட்டன. பல இடங்களில் குடகனாறு ஆற்றில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. எனவே சீமை கருவேல மரங்களை அகற்றி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குடகனாற்றில் தடையின்றி தண்ணீர் வருவதற்கு காமராஜர் அணை அருகே உள்ள தடுப்பணையை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.