தேனியில் அடுத்தடுத்து ரெயில்வே கேட் மூடப்பட்டதால்போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள்
தேனியில் அடுத்தடுத்து ரெயில்வே கேட் மூடப்பட்டதால் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின. பஸ்கள் மாற்றுச்சாலையில் திருப்பி விடப்பட்டன.
ரெயில் என்ஜின்கள்
மதுரையில் இருந்து போடிக்கு தினமும் காலையில் பயணிகள் ரெயில் வந்து செல்கின்றன. அத்துடன் சென்னை-போடி இடையே வாரம் 3 நாட்கள் அதிவேக விரைவு ரெயில் சேவை இயக்கப்படுகிறது. நேற்று காலை 8.50 மணியளவில் சென்னையில் இருந்து போடிக்கு செல்லும் ரெயில் தேனியை கடந்து சென்றது. அதைத் தொடர்ந்து மதுரை-போடி ரெயில் கடந்து சென்றது.
இதனால் ஏற்பட்ட வாகன நெரிசல் சில நிமிடங்களில் சீரானது. இந்நிலையில், பகல் 12 மணியளவில் தேனியில் இருந்து மதுரை நோக்கி அடுத்தடுத்து 2 ரெயில் என்ஜின்கள் புறப்பட்டுச் சென்றன.
ஸ்தம்பித்த போக்குவரத்து
குறுகிய இடைவெளியில் ரெயில் என்ஜின்கள் புறப்பட்டுச் சென்றதால் அடுத்தடுத்து ரெயில்வே கேட்கள் திறப்பதும், மூடுவதுமாக இருந்தது. இதனால் நகரில் உள்ள பிரதான சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக மதுரை சாலை நெரிசலில் ஸ்தம்பித்தது. மதுரை சாலை ரெயில்வே கேட்டில் இருந்து பங்களாமேடு வரை சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
ஏற்கனவே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருவதால் சாலையின் அகலம் குறுகியதால், ரெயில்வே கேட் திறக்கப்பட்ட போதிலும் நெரிசல் குறையவில்லை. இதனால் பஸ்கள் பாரஸ்ட்ரோடு வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. அந்த சாலை குறுகலான பகுதி என்பதால் பாரஸ்ட்ரோடு பகுதியும் நெரிசலில் ஸ்தம்பித்தது. வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றன.
சீரமைப்பு பணி
இதையடுத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி தலைமையில் போலீசார் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு நெரிசல் குறைந்து இயல்பு நிலை திரும்பியது. இதனால் பஸ்களில் பயணம் செய்த மக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
புதிய பஸ் நிலையம் சென்று வேறு பஸ்கள் மாற வேண்டிய சூழலில் சிலர் பஸ்களில் இருந்து இறங்கி பஸ் நிலையத்துக்கு நடந்து சென்றனர். எனவே மேம்பாலம் அமைக்கும் பணிகள் காரணமாக, இதுபோன்ற நெரிசல் அடிக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளதால், போக்குவரத்து போலீஸ் நிலையத்துக்கு கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.