வரத்து அதிகரித்ததால் பூக்கள் விலை கடும் சரிவு


வரத்து அதிகரித்ததால் பூக்கள் விலை கடும் சரிவு
x
தினத்தந்தி 22 May 2023 12:15 AM IST (Updated: 22 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் வரத்து அதிகரித்ததால் பூக்கள் விலை கடுமையாக சரிந்துள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வரத்து அதிகரித்ததால் பூக்கள் விலை கடுமையாக சரிந்துள்ளது.

பூக்கள் விலை குறைவு

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மதுரை, திண்டுக்கல், நிலக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து தினமும் பூக்கள் வருகின்றன. இந்த பூக்களை வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் பெற்று விற்பனை செய்து வருகின்றனர்.கடந்த 2 மாதங்களில் விற்பனையான விலையை விட அதிரடியாக விலை குறைந்துள்ளது, குறிப்பாக 4-ல் ஒரு மடங்கு விலைதான் தற்போது உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ராமநாதபுரத்தில் பூ வியாபாரி வெங்கட் அருண்குமார் என்பவர் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தின் பூ தேவையை மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் இருந்து வாங்கிதான் பூர்த்தி செய்து வருகிறோம். கார்த்திகை மற்றும் மாசி, பங்குனி மாதங்களில் மல்லிகை விலை ரூ.2 ஆயிரத்து 500-ஐ தாண்டி விற்பனையானது. ஜாதி பிச்சி ரூ.2 ஆயிரமாகவும், முல்லை ரூ.2 ஆயிரத்து 600 ஆகவும், கனகாம்பரம் ரூ.2ஆயிரத்து 800 ஆகவும், ரோஜா மலர்கள் ரூ.600 ஆகவும் உச்சத்தை தொட்டது.

வரத்து அதிகரிப்பு

இந்நிலையில் தற்போது வரத்து அதிகரித்து உள்ளதால் பூக்கள் விலை சரிவடைந்துள்ளது. தற்போது கிலோ மல்லிகை ரூ.300, முல்லைபூ ரூ.180, கனகாம்பரம் ரூ.400 என அனைத்து பூக்களும் விலை குறைந்துள்ளது. ரோஜா மலர்கள், செவ்வந்தி மலர்கள் மட்டுமே விலை அதிகரித்து ரூ.400 என விற்பனையாகிறது. இந்த பூக்களின் உற்பத்தி குறைந்துள்ளதால் அவை மட்டும் விலை உயர்ந்துள்ளது. மற்ற பூக்கள் விலை சரிவை கண்டுள்ளதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story