கோத்தகிரி அருகே மயான வசதி, சாலை வசதி இல்லாததால் சாலையோரத்தில் இறந்தவரின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்த பொதுமக்கள்
கோத்தகிரி அருகே மயான வசதி, சாலை வசதி இல்லாததால் சாலையோரத்தில் வைத்து இறந்தவரின் உடலுக்கு பொதுமக்கள் இறுதிச்சடங்கு செய்தனர்.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே மயான வசதி, சாலை வசதி இல்லாததால் சாலையோரத்தில் வைத்து இறந்தவரின் உடலுக்கு பொதுமக்கள் இறுதிச்சடங்கு செய்தனர்.
சாலை வசதி இல்லை
கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் அட்டவளை பாரதி நகர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் நடுஹட்டி ஊராட்சிக்குட்பட்டதாகும். அட்டவளை பாரதி நகர் கிராமத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அட்டவளை பாரதி நகர் கிராமமானது மலைப்பகுதியில் அமைந்துள்ளது. எனவே இங்கு வாழ்ந்து வரும் மக்கள் தங்களின் மருத்துவம், வேலை, குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட தேவைகளுக்காக வெளியே செல்வதற்கு, இப்பகுதியில் அமைந்துள்ள செங்குத்தான குறுகிய கான்கிரீட் நடைபாதையை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்துவதற்காக, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சாலை அமைக்க அரசு மூலம் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுவரை உரிய சாலை வசதி அமைக்கப்படவில்லை.
சாலையோரத்தில் இறுதிச்சடங்கு
இதுவரை சுமார் 15-க்கும் மேற்பட்ட இறந்தவர்களின் உடல்களை கிராமத்தில் உள்ள தங்களின் வீடுகளுக்கு சுமந்து சென்று இறுதிச் சடங்குகள் செய்ய சிரமம் என்பதால், கிராமத்திற்கு அருகே உள்ள சாலையோரத்தில் வைத்து இறுதி சடங்குகள் செய்த பின்னர் அருகிலுள்ள வெஸ்ட்புரூக் பகுதிக்கு கொண்டுச் சென்று அங்குள்ள பொது மயானத்தில் அடக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இந்த கிராமத்தைச் சேர்ந்த ராசு என்பவருக்கு திடீரென உடல்நலகுறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உறவினர்கள் உடலை தங்களது கிராமத்திற்கு நேற்று கொண்டுவந்துள்ளனர். ஆனால் போதிய சாலை வசதி இல்லாத தங்களது கிராமத்தில் இறந்தவரின் உடலை வீட்டிற்கு சுமந்து செல்ல முடியாததால், நெடுஞ்சாலை ஓரத்தில் வைத்து இறுதி சடங்குகளை செய்து உடலை அடக்கம் செய்துள்ளனர்.
அட்டவளை பாரதிநகர் கிராமத்திற்கு உரிய தார்சாலை வசதி மற்றும் மயானம் அமைத்துத் தரவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.