மழைப்பொழிவு இல்லாததால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது


மழைப்பொழிவு இல்லாததால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது
x

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

தேனி

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசன நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. கேரள மாநிலம் தேக்கடி வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அணையின் உச்சபட்ச நீர்மட்டம் 152 அடி ஆகும். இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.

இந்த அணையின் மூலம் தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் இருபோக பாசன வசதி பெறுகிறது.. தற்போது அணைப்பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 100 கன அடி வீதம் இரைச்சல் பாலம் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கன மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதன்படி கடந்த 22-ந்தேதி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1319 கனஅடியாக இருந்தது.

இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர் வரத்து குறைந்துவிட்டது. அதன்படி இன்று முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 235 கனஅடியாக குறைந்தது. நீர்மட்டம் 132.10 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு மட்டும் வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாறு, தேக்கடி பகுதியில் இன்று மழைப்பொழிவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story