நில பிரச்சினை காரணமாக சகோதரர்கள் தீக்குளிக்க முயற்சி
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நிலம் பிரச்சினை காரணமாக சகோதரர்கள் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நிலம் பிரச்சினை காரணமாக சகோதரர்கள் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளிக்க வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக சிலர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதேபோன்று இந்த வாரமும் குறைதீர்வு நாள் கூட்டத்தின் போது யாரும் தீக்குளிக்க முயற்சி செய்வது போன்ற செயலில் ஈடுபடாமல் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் கலெக்டர் முருகேஷ் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்வது குறித்து நுழைவு வாயில் பகுதி, வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லும் பகுதி போன்றவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆனால் அதிகாரிகள் ஆய்வு செய்த சில நிமிடங்களில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி கட்டைய கவுண்டர் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், சேகர். இவர்கள் இருவரும் சகோதரர்கள். இன்று இவர்கள் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு அளிப்பதற்காக வந்தனர்.
பின்னர் அவர்கள் இருவரும் திடீரென மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், நாங்கள் கடந்த 1996-ம் ஆண்டு எங்கள் பகுதியில் ஒரு ஏக்கர் 76 சென்ட் விளை நிலத்தை கிரயமாக வாங்கினோம்.
அந்த நிலத்தை சகோதரர்களாகிய நாங்கள் பாகப்பிரிவினை செய்யும் போது, அதில் 0.50 ஏக்கர் நிலம் விற்ற நபரின் பெயரிலேயே இருந்துள்ளது.
சகோதரர்கள் மீது வழக்கு
இதுகுறித்து அவரிடம் கேட்டால் தற்போது அந்த இடத்தின் மதிப்பு கூடி உள்ளதாக கூறி அதற்கான பணத்தை கொடுக்க வேண்டும். இல்லை என்றால் நிலத்தை கொடுக்க முடியாது என கொலை மிரட்டல் விடுக்கிறார்.
அதனால் தங்கள் நிலத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்கக்கோரி தீக்குளிக்க முயன்றதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களை போலீசார் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
மேலும் அவர்கள் மீது தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.