மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
ஏலகிரி மலையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்ததால் விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது.
ஏலகிரி மலை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. சுற்றுலாத்தலமான இங்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நண்பர்கள், குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.
வார விடுமுறை நாட்களில் இங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, மூலிகை பண்ணை, மங்களம் சுவாமி மலை ஏற்றம், முருகன் கோவில் உள்ளிட்டவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து செல்வார்கள்.
சுற்றுலா பயணிகள் குறைவு
இந்த நிலையில் ஏலகிரி மலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை மழை பெய்தது. இதனால் வாரவிடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது. இதனால் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் குறைந்த அளவில் வந்ததால் படகுகள் காலியாக காணப்பட்டது.