நீர்வரத்து சீரானதால்கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
நீர்வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.
பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இங்கு தினமும் தேனி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
கடந்த 1-ந்தேதி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதைத்தொடர்ந்து நீர்வரத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நீர்வரத்து சீரானதால் நேற்று முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். அருவியில் குளிக்க திடீரென வனத்துறையினர் அனுமதி அளித்ததால் நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாக காணப்பட்டது.