"கட்சியில் உழைப்பவர்களுக்கு மட்டுமே இடம்" - நிர்வாகிகளிடம் துரை வைகோ பேச்சு
தூத்துக்குடியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குறித்த மாமனிதன் ஆவணப்படம் திரையிடப்பட்டது
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லட்சுமி திரையரங்கில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குறித்த மாமனிதன் ஆவணப்படம் திரையிடப்பட்டது.
இத்திரைப்படத்தை ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று ஆவணத்திரைப்படத்தை பார்த்தனர்.
பின்னர் துரை வைகோ பேசியதாவது:
இந்த ஆவணத் திரைப்படம் உருவாக்கப்பட்ட விதம் வைகோவிற்கு தெரியாது. தென் மாவட்டங்களில் தலைவர் வைகோ இருக்கும்பொழுது கட்சி வலுவாக இருந்தது. பழையபடி இழந்ததை மீட்க வேண்டும். வரலாறு படைக்க வேண்டும் என்று இத்தருணத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
நான் பல திட்டங்கள் வைத்துள்ளேன். இயக்கத்தை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும். இழந்ததை மீட்போம், வரலாறு படைப்போம், அதற்கு ஒரு செயல் திட்டம் வைத்துள்ளேன். நம்மால் முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த ஆவணப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று தொண்டர்கள், நிர்வாகிகள் இணையதளங்கள் மற்றும் வீடு வீடாக எடுத்துச் சென்றுள்ளனர்.
இதை சாதாரண தொண்டர்கள் செய்யும் பொழுது ஏன் மூத்த நிர்வாகிகள் செய்ய தயங்குகின்றனர். இயக்கத்திற்கு உழைப்பவர்கள் மட்டுமே கட்சியில் இருக்க முடியும். மற்றவர்கள் கதவு திறந்தே உள்ளது வெளியே செல்லலாம். உழைப்பிற்கும், விசுவாசத்திற்கு மட்டும் தான் மரியாதை. வைகோ மாதிரி நான் தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டேன். வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு தான்.
இவ்வாறு அவர் பேசினார்.