சி.பா.ஆதித்தனார் உருவப்படத்துக்கு துரை வைகோ மரியாதை
சங்கரன்கோவிலில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் உருவப்படத்துக்கு துரை வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கீதாலயா தியேட்டர் வளாகத்தில் ம.தி.மு.க. சார்பில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு, சி.பா.ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் கூறுகையில், 'உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு' என்று 75 ஆண்டுகளுக்கு முன்பே முழக்கமிட்டவர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார். ஏழை, எளிய மக்கள் அரசியல் மற்றும் அன்றாட நிகழ்வுகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக 'தினத்தந்தி' பத்திரிகையை கொண்டு வந்தார். அன்னாரின் 118-வது பிறந்த நாளில் அவரை வணங்குகிறேன். தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்தபோது சபாநாயகராக பொறுப்பேற்று திறம்பட செயல்பட்டவர் சி.பா.ஆதித்தனார். 2024-ல் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரும் என்று பா.ஜனதாவினர் கூறி வருவது ஜனநாயக முறைக்கு எதிரானது ஆகும். ஒரு வன்முறை சம்பவம் நடைபெறும்போது ஒரு குறிப்பிட்ட மதத்தை குறை சொல்வது நன்றாக இருக்காது. விசாரணை என்ற பெயரில் அப்பாவி பொதுமக்களை துன்புறுத்தக்கூடாது. வாக்கு வங்கியை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படும் அரசியல்வாதிகள் மத்தியில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என்றார்.
இதில், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன், நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் நிஜாம், இளைஞர் அணி துணைச் செயலாளர் இசக்கியப்பன், மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சுப்பாராஜ், நகர செயலாளர் ஆறுமுகசாமி, துணை செயலாளர் ராஜமாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துச்செல்வி, சங்கரன்கோவில் நகரசபை தலைவி உமா மகேஸ்வரி, சங்கரன்கோவில் யூனியன் தலைவர் லாலா சங்கரபாண்டியன், நகர்மன்ற உறுப்பினர்கள் கோமதி, ராஜேஸ்வரி, அலமேலு, புனிதா, விஜயகுமார், செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.