புத்தாண்டு விடுமுறையையொட்டிகொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்;அருவிபோல் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்
புத்தாண்டு விடுமுறையையொட்டி கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்கு அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.
புத்தாண்டு விடுமுறையையொட்டி கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்கு அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.
கொடிவேரி அணை
கோபியை அடுத்த கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இந்த தடுப்பணையில் தண்ணீர் அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டும்.
அவ்வாறு ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்காக ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், திருப்பூர், சேலம், நாமக்கல், குமாரபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர்.
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
இதனால் கொடிவேரி அணைக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டுமின்றி அரசு விடுமுறை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வர். மேலும் அங்கு விற்பனை செய்யப்படும் மீன் வறுவல்கள் ஆகியவற்றை வாங்கி ருசித்து சாப்பிடுவார்கள். அதுமட்டுமில்லாமல் தாங்கள் கொண்டு வரும் உணவு பொருட்களை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்தும் உண்பர்.
இந்த நிலையில் நேற்று ஆங்கில புத்தாண்டு விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணையில் குவிந்தனர். அங்கு அவர்கள் அருவி போல் கொட்டிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்து சென்றனர்.
அணைப்பூங்கா
இதேபோல் பவானிசாகர் அணையின் முன்பகுதியில் நீர்வள துறைக்கு சொந்தமான அணைப்பூங்கா அமைந்துள்ளது. 15 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பூங்காவில் படகு இல்லம், சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல், சிறுவர் ரெயில், கொலம்பஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு அம்சங்களுடன் கூடிய உபகரணங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஓய்வெடுப்பதற்காக அழகிய புல் தரைகள் அமைக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் பவானிசாகர் அணைப்பூங்காவுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.
பயணிகள் ஏமாற்றம்
இந்த நிலையில் நேற்று ஆங்கில புத்தாண்டு என்பதால் ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பவானிசாகர் அணைப்பூங்காவுக்கு வந்தனர். அவர்கள் பூங்காவில் குடும்பத்துடன் பொழுதை கழித்ததுடன், ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு சாதனங்களில் விளையாடி மகிழ்ந்தனர். பூங்காவில் உள்ள படகு இல்லம் கடந்த சில மாதங்களாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் படகு இல்லம் செயல்படவில்லை. மேலும் படகு இல்லத்தில் தண்ணீர் வற்றிய நிலையில் படகுகளையும் காணவில்லை. இதனால் பூங்காவில் உள்ள படகில் பயணிக்கலாம் என ஆர்வத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து சென்றனர்.