வடகிழக்கு பருவமழையையொட்டி ரேஷன் கடைகளில் 750 டன் அரிசி இருப்பு அதிகாரி தகவல்
வடகிழக்கு பருவமழையையொட்டி ரேஷன் கடைகளில் 750 டன் அரிசி இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் 1,113 முழு நேர ரேஷன் கடைகள், 279 பகுதி நேர ரேஷன்கடைகள் என மொத்தம் 1,412 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் மூலம் 7 லட்சத்து 76 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இவர்களின் தேவைக்காக ஒவ்வொரு மாதமும் 8 ஆயிரத்து 460 டன் புழுங்கல் அரிசி, 296 டன் கோதுமை, 612 டன் துவரம் பருப்பு, 6 லட்சத்து 31 ஆயிரம் பாக்கெட் பாமாயில், 865 டன் சர்க்கரை உள்ளிட்டவை இறக்குமதி செய்யப்பட்டு, ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் பொன்மணி, பச்சரிசி, பி.ஆர்.ஏ. உள்ளிட்ட ரக அரிசி அதிகளவில் மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
மண்எண்ணெய் தயார்
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு தேவையான நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி மழையால் அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய பகுதியில் உள்ள 298 ரேஷன் கடைகளும் முழுமையாக சீரமைக்கப்பட்டு, அங்கு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளில் 750 டன் புழுங்கல் அரிசியும், 24 ஆயிரம் லிட்டர் மண்எண்ணெயும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.