துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி
சந்திரம்பாடி கிராமத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.
சேத்துப்பட்டு
பெரணமல்லூர் ஒன்றியம் சந்திரம்பாடி கிராமத்தில் உள்ள பாஞ்சாலி அம்மன் கோவில் அக்னி வசந்த விழா 17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது.
கண்ணன், பாஞ்சாலி அம்மன், தர்மர், அர்ஜுனன், பீமன் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம் செய்து பம்பை, உடுக்கை, நாதஸ்வர, மேளத்தாளத்துடன் கோவிலில் அலகு நிறுத்தி தீபாராதனை செய்து, விழா கொடி ஏற்றி வைத்தனர். 18 நாள் மகாபாரத சொற்பொழிவு நடந்தது. மேலும் 10 நாள் மகாபாரத நாடகம் நடந்தது.
தினமும் பாஞ்சாலி அம்மன், கண்ணன், தர்மர், பீமன், அர்ஜுனன் ஆகிய உற்சவமூர்த்திகளின் வீதி உலா நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான அர்ஜுனன் தபசு, துரியோதனன் படுகளம் நடந்தது.
இதில் கண்ணன், பாஞ்சாலி, பீமன், துரியோதனன் ஆகியோர் வேடமிட்டு நடித்து காண்பித்தனர். துரியோதனுடைய தாயார் காந்தாரி ஒப்பாரி வைத்து பாட்டு பாடினார்.
இதை முன்னிட்டு 30 அடி நீளத்துக்கு களிமண்ணால் துரியோதனன் உருவ சிலை அமைக்கப்பட்டது. பின்னர் விரதம் இருந்து காப்பு கட்டிய ஆண்களும் பெண்களும் தீ மிதித்தனர்.
இதையடுத்து மறுநாள் தர்மருக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டது.
விழா ஏற்பாடுகளை பெரணமல்லூர் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் செல்வராஜ் தலைமையில் விழா குழுவினர், நாட்டாமைக்காரர்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.