முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் சேகர்பாபு-அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு
குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் சேகர்பாபு-அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தனர்.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினத்தில் நாளைமறுநாள்(திங்கட்கிழமை) தொடங்கவுள்ள முத்தாரம்மன் ேகாவில் தசரா திருவிழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.
முத்தாரம்மன் தசரா திருவிழா
உலகப்புகழ் பெற்ற குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளைமறுநாள்(திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான மகிஷா சூரசம்ஹாரம் அக்.5-ந் தேதி நடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தசரா திருவிழா கோவில் வளாகத்திற்குள் எளிமையாக கொண்டாடப்பட்டது. பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
அமைச்சர்கள் ஆய்வு
இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிக அளவு பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், முன்னேற்பாடுகள் குறித்தும் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தமிழக இந்து அறநிலைய துறை கமிஷனர் குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்துவதற்காக நேற்று குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வருகை தந்தனர்.
அதிகாரிகளுக்கு உத்தரவு
அவர்களுக்கு கோவில் சார்பில் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் திருவிழா ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.
அப்போது அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளிடம் கூறுகையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுடன் தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு எவ்வித குறையும் இல்லாமல் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் அதிகாரிகள் கூடுதல் கவனம் எடுத்து பணி செய்ய வேண்டும். இது தொடர்பாக எந்த தேவை என்றாலும் அதிகாரிகள் என்னை(சேகர்பாபு) உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும். துப்புறவு பணிகளுக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். திருவிழாவிற்கு முன்பாக மீண்டும் வருவேன். அதற்குள் விரிவாக அனைத்து பணிகளும் முடித்துவிட வேண்டும்' என தெரிவித்தார்.
கலந்து கொண்டவர்கள்
இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், அதிகாரிகள், தி.மு.க. கட்சிபிரமுகர்கள் கலந்து கொண்டனர்.