தசரா திருவிழா களைகட்டியது: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவையொட்டி, தென் மாவட்டங்களில் வேடம் அணிந்த பக்தர்களால் தசரா திருவிழா களைகட்டியது. கோவிலில் நாளை (புதன்கிழமை) இரவில் சூரசம்ஹாரம் நடக்கிறது.
குலசேகரன்பட்டினம்,
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். தினமும் காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மாலையில் சமய சொற்பொழிவு, பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர்.
நாளை, சூரசம்ஹாரம்
8-ம் நாளான நேற்று இரவில் கமல வாகனத்தில் கசலட்சுமி கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 9-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) இரவில் அன்ன வாகனத்தில் கலைமகள் கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். 10-ம் நாளான நாளை (புதன்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது.
வேடம் அணிந்த பக்தர்கள்
இதற்கிடையே பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு கட்டி, நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர்.
பெரும்பாலான பக்தர்கள் காளி, சிவன், பார்வதி, ராமர், லட்சுமணன், அனுமார், பிரம்மன், விஷ்ணு, கிருஷ்ணர் போன்ற சாமி வேடங்களையும், அரசன், அரசி, போலீஸ்காரர், குறவன், குறத்தி, கரடி, அரக்கன் போன்ற பல்வேறு வேடங்களையும் அணிந்து காணிக்கை வசூலிக்கின்றனர். தசரா குழுவினரும் ஊர் ஊராக சென்று பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தி காணிக்கை வசூலிக்கின்றனர். இதனால் தென் மாவட்டங்களில் காணும் இடமெல்லாம் வேடம் அணிந்த பக்தர்களாகவே காட்சி அளிப்பதால் தசரா திருவிழா களைகட்டியது.