பட்டாமாறுதல் குறித்த மனுக்களுக்கு 15 நாட்களில் தீர்வு
பட்டா மாறுதல் குறித்த மனுக்களுக்கு 15 நாட்களில் தீர்வு காணப்படும் என்று தஞ்சை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்தார்.
தஞ்சாவூர்:
பட்டா மாறுதல் குறித்த மனுக்களுக்கு 15 நாட்களில் தீர்வு காணப்படும் என்று தஞ்சை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்தார்.
ஜமாபந்தி நிகழ்ச்சி
தஞ்சை தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாய (ஜமாபந்தி) கணக்குகள் தணிக்கையானது நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமை தாங்கினார். தாசில்தார் சக்திவேல் வரவேற்றார்.
தொடக்கநாளான நேற்று தஞ்சை தாலுகா பெரம்பூர் சரகத்தில் உள்ள 11 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பட்டா மாற்றம் தொடர்பான மனுக்களை கூடுதல் கலெக்டர் சுகபுத்ராவிடம் வழங்கினர். அப்போது அவர் கூறியதாவது:-
பட்டா மாற்றம்
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை தாலுகாவில் உள்ள 9 தாலுகா அலுவலகத்திலும் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த 9 தாலுகாவும், 720 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது. பட்டா மாற்றம் தொடர்பான மனுக்கள் வரப்பெற்றன. பட்டா மாற்றம் தொடர்பான மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு அளிக்கப்பட்டு வருகிறது. மனு அளிக்கப்பட்டதில் இருந்து அதனை பரிசீலித்து அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் தீர்வு காணப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டு குறைந்தபட்சம் 15 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் புதிய அரசாணைப்படி பட்டா மாற்றத்திற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தலின் பேரில் உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு 13 ஆயிரத்து 650 மனுக்கள் நிலுவையில் இருந்தது. ஆனால் தற்போது பெரும்பாலான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு 2900 மனுக்கள் மட்டுமே நிலுவையில் உள்ளது. அந்த மனுக்களும் விரைவில் தீர்வு காணப்படும்.
கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு பயிற்சி
இது தவிர பட்டா மாற்றம் தொடர்பான மனுக்களுக்கு உடனடி தீர்வு காண முன்பு நில அளவையர், தாசில்தார் நடவடிக்கை மேற்கொள்வார்கள். தற்போது இது தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு தாலுகா அளவில் மண்டல அலுவலரும் நியமிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.
மேலும் ஜமாபந்தி நிகழ்ச்சி அடுத்ததாக வருகிற 16-ந் தேதி வல்லம் சரகத்திற்கும், 17-ந் தேதி தஞ்சை சரகத்திற்கும், 18-ந் தேதி ராமாபுரம், 19-ந் தேதி நாஞ்சிக்கோட்டை சரகத்திற்கும் நடைபெற உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தனி தாசில்தார்கள் சீமான் (சமூக பாதுகாப்பு திட்டம்), பாலசுப்பிரமணியன் (நகர்புற நல திட்டம்), ரகுராமன் (ஆதிதிராவிடர் நலன்), வட்ட வழங்கல் அலுவலர் ராஜகுமார், வேளாண் உதவி இயக்குனர் அய்யம்பெருமாள் மற்றும் அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.