முதல் ஆயிரம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் இ சான்றிதழ்
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்திடும் முதல் ஆயிரம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் இ சான்றிதழ் வழங்கப்படும் என கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன் குமார் தொிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆதார் எண்ணை இணைக்கும்பணி
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை கடந்த 1-ந் தேதி முதல் தொடங்க உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் தூய்மையாக்கும் வகையில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் தனி தகவல்களை உறுதிப்படுத்தவும், ஒரு வாக்காளரின் விவரம் ஒரே தொகுதியில் இரு வேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது இரு வேறு தொகுதிகளில் இடம் பெறுதலை தவிர்க்கும் வகையிலும் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள வாக்காளர்கள் தானாக முன்வந்து தங்களது வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்திட வேண்டும். அப்படி இணைத்திடும் முதல் ஆயிரம் வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் இ சான்றிதழ் வழங்கப்படும்.
இணையதளத்தில்
இச்சான்றினை பெற்றிட https://www.nvsp.in என்ற இணையதளம் அல்லது Voter Helpline App(VHA) என்ற மொபைல் செயலி, http://voterportal.eci.gov.in ஆகிய ஏதேனும் ஒரு செயலியை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்திட வேண்டும். வெற்றிகரமாக இணைத்த பின்பு அதற்கு வழங்கப்படும் குறியீட்டு எண்ணை தனியாக குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் http://elections.tn.gov.in/getacertificate என்ற இணையதளத்தில் முகவரிக்கு சென்று மொபைல் எண்ணையும், ஓ.டி.பி. எண்ணையும் உள்ளீடு செய்தால் சான்றிதழ் கிடைக்கும்.
எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குட்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் உரிய வழிமுறைகளை பின்பற்றி இணைத்து இ சான்றிதழை தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாய்ப்பினை வாக்காளர்கள் பயன்படுத்திக்கொண்டு தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்திட வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.