பெண் வக்கீல்கள் சங்கம் சார்பில் மின்-சட்ட நூலகம்
திருச்சி பெண் வக்கீல்கள் சங்கம் சார்பில் மின்-சட்ட நூலகத்தை ஐகோர்ட்டு நீதிபதி ஸ்ரீமதி தொடங்கி வைத்தார்.
திருச்சி பெண் வக்கீல்கள் சங்கம் சார்பில் மின்-சட்ட நூலகத்தை ஐகோர்ட்டு நீதிபதி ஸ்ரீமதி தொடங்கி வைத்தார்.
மின்-சட்ட நூலகம்
திருச்சி பெண் வக்கீல்கள் சங்க 23-ம் ஆண்டு விழா, உலக மகளிர் தின விழா மற்றும் மின்-சட்ட நூலகம் தொடக்க விழா திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு சங்க தலைவர் வக்கீல் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயந்தி ராணி வரவேற்று பேசினார்.
திருச்சி மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி கே.பாபு, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா ஆகியோர் சிறப்புரையாற்றினர். திருச்சிராப்பள்ளி பார் அசோசியேஷன் துணைத்தலைவர் சிவக்குமார், திருச்சி சிட்டி அட்வகேட்ஸ் அசோசியேஷன் செயலாளர் முத்துமாரிஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
அனைத்து வழக்கிலும் வாதாட வேண்டும்
சென்னை ஐகோர்ட்டு (மதுரை கிளை) நீதிபதி எஸ்.ஸ்ரீமதி கலந்துகொண்டு கல்வெட்டை திறந்து வைத்து மின்-நூலகத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-
பெண் வக்கீல்களின் திறமைகளை மேம்படுத்த மின்-சட்ட நூலகத்தை தொடங்கியுள்ளீர்கள். இது உங்கள் முயற்சிக்கு ஒரு மைல்கல். குடும்ப பிரச்சினை தொடர்பான வழக்குகளை மட்டுமே பெண் வக்கீல்கள் அதிகமாக கையாளுகிறீர்கள்.
முதலில் நீங்கள் அந்த பாதுகாப்பு வளையத்தில் இருந்து வெளியே வந்து அனைத்து விதமான வழக்குகளிலும் ஆஜர் ஆகி வாதாட வேண்டும். அப்போது தான், உங்கள் திறமைகளை வளர்த்து நீதிபதி ஆக முடியும். தற்போது அனைத்து துறைகளிலும் பெண்களே அதிகமாக உள்ளனர். விரைவில் ஆண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் நிலை வரலாம்.இவ்வாறு நீதிபதி ஸ்ரீமதி பேசினார்.
இளம் சாதனையாளர் விருது
விழாவில் துப்பாக்கி சுடுதலில் சாம்பியன் பட்டம் பெற்ற எஸ்.வாசினி, டேக்வாண்டோ மற்றும் ஹேண்ட் பால் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற ஹேமமாலதி மற்றும் டாக்டர் எம்.சந்தோஷி ஆகியோருக்கு 'இளம் சாதனையாளர்கள்' விருது வழங்கப்பட்டது.
விழாவில் திருச்சி மாவட்ட மகிளா கோர்ட்டு நீதிபதி ஸ்ரீவத்சன் உள்ளிட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஏ.விஜயலட்சுமி நன்றி கூறினார்.