கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை சூரசம்ஹாரம்
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை சூரசம்ஹாரம் நடக்கிறது.
கழுகுமலை:
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 25-ந் தேதி தொடங்கியது. விழாநாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமிக்கு, சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. 5-ம் நாள் விழாவான இன்று(சனிக்கிழமை) மதியம் சூரபத்மனின் இளையசகோதரர் தாரகாசூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. இதை முன்னிட்டு நாளை காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளாபூஜை, காலசந்தி பூஜைகள் நடைபெறும். காலை 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. மதியம் 12 மணிக்கு உச்சிகாலை பூஜை நடைபெறும். மாலை 4.30 மணியளவில் முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 7 மணிக்கு கோவில் சீர்பாதம் தாங்கிகள் சார்பில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.