வடிவேல் பட பாணியில் முதியவர்களுக்கு காது குத்து விழா


வடிவேல் பட பாணியில் முதியவர்களுக்கு காது குத்து விழா
x

அணைக்கட்டு அருகே காது குத்தவில்லை என நண்பர்கள் கிண்டல் செய்ததால் வடிவேல் பாணியில் முதியவர்களான அண்ணன்- தம்பிக்கு கறி விருந்துடன் காது குத்து விழா நடந்தது.

வேலூர்

நண்பர்கள் கிண்டல்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த மருதுவல்லிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிக்கோடி கிராமத்தை சேர்ந்தவர் முனிவேல் (வயது 60), கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். முனிவேலுடன் பிறந்தவர்கள் ராஜா (55) உள்பட 5 சகோதரர்கள், 3 சகோதரிகள் என மொத்தம் 8 பேர் உள்ளனர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மூத்த சகோதரர்களான முனிவேல் மற்றும் ராஜா ஆகியோருக்கு அவரது பெற்றோர் காது குத்து விழா நடத்தவில்லை.

மற்றவர்களுக்கு திருப்பதிக்கு அழைத்து சென்று சிறுவயதிலேயே மொட்டை அடித்து காது குத்து விழா நடத்தியுள்ளனர். இதனால் முனிவேல் மற்றும் ராஜா ஆகியோரை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் காது குத்தாதவன் என அடிக்கடி கிண்டல் செய்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவரது குடும்பத்தினர் ஒன்றிணைந்து 2 பேருக்கும் காது குத்து விழா நடத்த முடிவு செய்தனர்.

முதியவர்களுக்கு காது குத்து

அதன்படி மருதவல்லிபாளையம் கிராமத்தில் உள்ள அவர்களது குலதெய்வம் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து, கிடா வெட்டி, உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் முன்னிலையில் 60 வயதை கடந்த முனிவேல் மற்றும் ராஜா ஆகியோருக்கு, அவர்களது 90 வயது தாய் மாமன் தங்கவேல் மடியில் உட்கார வைத்து தடபுடலாக காது குத்து நடந்தது.

காது குத்து விழாவுக்கு வந்த உறவினர்கள் 50-க்கும் மேற்பட்ட வகை வகையான சீர்வரிசை தட்டுகளை வைத்து ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆட்டுக்கறி விருந்து பரிமாறப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டு போட்டிப் போட்டு மொய் எழுதினர்.


Next Story