சென்னை-பெங்களூரு அதிவிரைவு சாலையில் இரவு நேரத்தில் மண் நிரப்பும் பணியை நிறுத்த வேண்டும்
சென்னை-பெங்களூரு அதிவிரைவு சாலையில் இரவு நேரத்தில் மண் நிரப்பும் பணியை நிறுத்த வேண்டும் என்று கேசவனாங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் டி.சாந்தி தாசரதி கூறினார்.
சென்னை-பெங்களூரு அதிவிரைவு சாலையில் இரவு நேரத்தில் மண் நிரப்பும் பணியை நிறுத்த வேண்டும் என்று கேசவனாங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் டி.சாந்தி தாசரதி கூறினார்.
கேசவனாங்குப்பம் ஊராட்சி
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஒன்றியத்தில் கேசவனாங்குப்பம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் பெரிய கேசவனாங்குப்பம், சின்ன கேசவனாங்குப்பம், எஸ்.என்.கண்டிகை ஆகிய குக்கிராமங்களை உள்ளடக்கிய 6 வார்டுகள் உள்ளன. டி.சாந்தி தாசரதி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.
ஊராட்சியில் நிறைவேற்றப்பட்ட பணிகள் மற்றும் சேவைகள் குறித்து அவர் கூறியதாவது:-
கணினி மயமாக்கும் பணி
ஊராட்சி மன்ற அலுவலகம் தினமும் 8 மணி நேரம் திறந்து வைக்கப்படுகிறது. நான் தினமும் ஊராட்சி அலுவலகம் சென்று, பொதுமக்களை சந்தித்து குறைகளை நிறைவேற்ற ஆவன செய்கிறேன். பழுதடைந்த ஊராட்சியின் பழைய அலுவலகத்தை எனது சொந்த செலவில் பழுது பார்த்து, பெயிண்டு அடித்து புதுப்பித்தேன். ஊராட்சி தொடர்பான தகவல்கள் அனைத்தும் கணினி மயமாக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
பொதுமக்களின் புகார்களை, புகார் பதிவேட்டில் பதிவு செய்வதற்காக, சொந்த செலவில் கணினி, படித்த பெண் ஊழியரை வேலைக்கு நியமித்துள்ளேன். பொதுமக்களின் புகார் மற்றும் குறைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை, நேரிலோ அல்லது தொலை பேசி மூலமாகவோ தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சேவை
ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு தடையில்லா குடிநீர் மற்றும் மின்விளக்குகள் பராமரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இதற்காக, பொது நிதியில் பணம் இல்லையென்றாலும், எனது சொந்த பணத்தை செலவு செய்கிறேன். ஊராட்சி அலுவலகத்தில், கிராம நிர்வாக அதிகாரிக்காக தலைவர் அறையை ஒதுக்கி, பொதுமக்கள் சேவையை தினமும் பெறுவதற்கு ஏற்பாடு செய்துள்ளேன். இது பொது மக்களின் பல வருட கோரிக்கையாகும்.
நிறைவேற்றப்பட்ட பணிகளின் விவரம்:-
தடுப்பணை
பொது மக்களின் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக தெருக்களின் திருப்பங்களில் இருந்த மிகவும் பழமையான 2 மின்கம்பங்களை, ஊராட்சியின் பொது நிதியிலிருந்து ரூ.70 ஆயிரம் செலவில் மாற்றி புதிய கம்பங்கள் அமைக்கப்பட்டது. இது பெரிய கேசவனங்குப்பம் பொதுமக்களின் 20 வருட கோரிக்கை ஆகும். அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சத்து 30 ஆயிரத்தில் மழைநீர் கால்வாய் அமைத்து, குளத்திற்கு நீர்வழிப் பாதை அமைக்கப்பட்டது. பெரிய கேசவனாங்குப்பம், பெரிய தெருவில் பழுதடைந்த ஒரு பகுதியை சீரமைத்து, ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் புதிய சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது.
15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து, பழுதடைந்த குடிநீர் குழாய்களை அகற்றி, புதிய குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. ரூ.87 ஆயிரத்தில் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கழிவறை கட்டிடம் அமைக்கப்பட்டது. ரூ.87 ஆயிரத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கழிவறை மற்றும் ரூ.26 ஆயிரத்தில் 1000 லிட்டர் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்தில் சின்ன கேசவனாங்குப்பம் கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் பழுதடைந்த மின் மோட்டார் மற்றும் பைப்புகளை அகற்றி புதிய மின் மோட்டார் மற்றும் பைப்புகள் பொருத்தப்பட்டது. ரூ.1 லட்சத்தில் எஸ்.என்.கண்டிகை கிராமத்தில், ஆழ்துளை கிணற்றில் பழுதடைந்த மின் மோட்டார் மற்றும் பைப்புகளை அகற்றி புதிய மின் மோட்டார் மற்றும் பைப்புகள் பொருத்தப்பட்டது.
ஊராட்சியின் பொது நிதியிலிருந்து ரூ.27 ஆயிரம் செலவில், பெரிய கேசவனாங்குப்பம், ஊரின் முகப்பு பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ், மேட்டுக்குப்பம் குடியிருப்பு பகுதியில் ரூ.20 லட்சத்தில் குளம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.5½ லட்சத்தில் அரசமரத்து ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாயில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.6 லட்சத்தில், அரசமரத்து ஏரி, உபரி நீர் கால்வாயில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.7 லட்சத்தில், பெரிய கேசவனாங்குப்பம், சின்ன கேசவனாங்குப்பம் மற்றும் எஸ்.என்.கண்டிகையை இணைக்கும் குறுக்கு மண் சாலை ஓரடுக்கு ஜல்லி சாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதே சாலையில், ரூ.6 லட்சத்து 20 ஆயிரத்தில் சிறு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.1 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பில் 1,000 முருங்கை செடிகளுக்கான நர்சரி அமைத்து, வீடு வீடாக முருங்கை கன்றுகள் கொடுத்துள்ளோம்.
நடைபெறும் பணிகள்
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சத்தில் வண்ணான்குளத்தை ஆழப்படுத்தி, சிறு பாலம் அமைத்து நீர் கொண்டு வரும் பணி நடைபெற்று வருகிறது. ரூ.6 லட்சத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கழிப்பறை கட்டும் பணி, சோளிங்கர் தொகுதி ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சத்தில் பாட்டை புறம்போக்கு நிலத்தின் ஆக்கிரமிப்பை தடுப்பதற்காக, கிராம சாலையின் இரு புறத்திலும் தடுப்பு சுவர் அமைக்கும் பணி, நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ், மேட்டுக்குப்பம் குடியிருப்பு பகுதியில் ரூ.20 லட்சத்தில் குளம் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
சோளிங்கர் தொகுதி ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சத்தில் பாட்டை புறம்போக்கு நிலத்தின் ஆக்கிரமிப்பை தடுப்பதற்காக, கிராம சாலையின் இரு புறத்திலும் தடுப்பு சுவர் அமைக்கும் பணி, நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் அரசமரத்து ஏரிக்கு வரும் இரண்டு நீர்வரத்து கால்வாய்களில், ரூ.11 லட்சத்தில் தடுப்பணைகள், சுமார் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தானிய கிடங்கு, 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1½ லட்சத்தில் 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி மற்றும் பைப் லைன் அமைக்கும் பணி ஆகியவை நடைபெற உள்ளது.
நிறுத்த வேண்டும்
எங்கள் ஊராட்சியின் வழியாக சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணிகளுக்காக மண் நிரப்பும் வேலை, பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே நடக்கிறது. ராட்சத எந்திரங்கள் மூலம் பயங்கர சத்தத்துடன் இப்பணி மேற்கொள்ளப்படுவதால், எங்கள் ஊர் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். தண்ணீர் தெளிக்காமல் கனரக வாகனங்கள் மண் சாலையில் செல்வதால், தூசி மற்றும் புழுதி வீட்டின் சமையலறை வரை வருகிறது. இதனால் மூச்சு விட சிரமமாக இருக்கிறது. எனவே, குறைந்தபட்சம் இரவு நேரங்களில் மண் நிரப்பும் பணியை நிறுத்தவேண்டும் என்பது பொதுமக்களின் முக்கியமான கோரிக்கை ஆகும்.
மேலும், கிராம சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருக்கும் மாற்றுவழி சாலைகள் சரியாக பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. ஜல்லியினால் ஆன மாற்று சாலையை, தார் சாலையாக அமைத்து தர வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளேன். கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, சோளிங்கர் தொகுதி ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் வளர்மதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒத்துழைப்போடும், துணைத் தலைவர் சங்கீதா பெருமாள், வார்டு உறுப்பினர்கள் செல்வி, ஆனந்தன், விசாலாட்சி, கமலநாதன், புஷ்பா மற்றும் ஊராட்சி செயலாளர் எம்.ரமேஷ் ஆகியோருடன் இணைந்து எங்கள் ஊராட்சியை ராணிப்பேட்டை மாவட்டத்தின் அனைத்து கட்டமைப்புகளையும் பெற்ற முன்மாதிரி ஊராட்சியாக மாற்ற முயற்சிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.