கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைமை அலுவலக கட்டிடம்
விருதுநகரில் பா.ஜ.க. கிழக்கு மாவட்ட அலுவலக கட்டிடத்தை காணொலி காட்சி மூலம் தேசியத்தலைவர் ஜே.பி. நட்டா திறந்துவைத்தார்.
விருதுநகரில் பா.ஜ.க. கிழக்கு மாவட்ட அலுவலக கட்டிடத்தை காணொலி காட்சி மூலம் தேசியத்தலைவர் ஜே.பி. நட்டா திறந்துவைத்தார்.
திறப்பு விழா
விருதுநகர் புறவழிச்சாலையில் தாமரை நகரில் பா.ஜ.க. கிழக்கு மாவட்ட அலுவலக 3 மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலக கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கிருஷ்ணகிரியில் நடந்த விழாவில் தமிழகம் முழுவதும் விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பா.ஜ.க. அலுவலக கட்டிடங்களை மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஜே.பி. நட்டா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் மோடி 9 ஆண்டுகளுக்கு முன்பு கட்சி தேசிய தலைமை அலுவலகத்திற்கு வந்த போது நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பா.ஜ.க. அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என்று அப்போதைய தேசிய தலைவர் அமித்ஷாவிடம் அறிவுறுத்தினார்.
கட்டிடப்பணி
நான் அப்போது தேசிய பொதுச்செயலாளராக இருந்தேன். தற்போது 290 மாவட்டங்களில் பா.ஜ.க. அலுவலக கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும் 150 மாவட்டங்களில் கட்டிடப்பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில் 14 மாவட்ட அலுவலக கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் 6 மாவட்டங்களுக்கு கட்டிடப்பணி நடைபெற்று வருகிறது. மேலும் 39 மாவட்டங்களில் பா.ஜ.க. அலுவலக கட்டிடப்பணி நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
உழைக்க வேண்டும்
விழாவில் மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட அலுவலக கட்டடத்திற்கு ஜே.பி. நட்டா அடிக்கல் நாட்டினார். தற்போது அந்த கட்டிடம் உள்பட 10 மாவட்டங்களில் பா.ஜ.க. அலுவலக கட்டிடங்களை திறந்து வைக்கிறார். தமிழகத்தை பொறுத்தமட்டில் தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும். மக்களின் நலனுக்காக எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்படாமல் பா.ஜ.க. நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர். இன்னும் நாடாளுமன்ற தேர்தலுக்கு 12 மாதங்கள் உள்ளன. இது விரைவாக வந்துவிடும். எனவே அனைவரும் தமிழகத்தில் இருந்து 39 பா.ஜ.க. எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கல்வெட்டு
விருதுநகரில் நடைபெற்ற திறப்பு விழாவில் மாவட்ட தலைவர் பென்டகன் பாண்டுரங்கன் தலைமையில் மாநிலச்செயலாளர்கள் பொன் பாலகணபதி, பேராசிரியர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு கல்வெட்டை திறந்து வைத்தனர். இவ்விழாவில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாநில செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜகோபால், பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் சுப. நாகராஜன், பார்வையாளர் வெற்றிவேல், மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கஜேந்திரன், கோபால்சாமி, மாவட்ட நிர்வாகிகள் ஈஸ்வரன், சீதாராமன், அழகர்சாமி ராஜா, மணிகண்டன், புஷ்ப குமார், செல்வகுமார் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.