வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை


தினத்தந்தி 10 April 2023 12:30 AM IST (Updated: 10 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

ஈஸ்டர் திருநாள்

உலக மக்களின் பாவங்களை போக்குவதற்காக சிலுவையில் அறையப்பட்டு உயிரிழந்த ஏசு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு பின்னர் உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாக உலகில் உள்ள கிறிஸ்தவர்களால் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

கிறிஸ்தவர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் மிக முக்கியமான பண்டிகை ஈஸ்டர் பண்டிகை ஆகும். இந்த ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கருதுகின்றனர். இந்த சிறப்பு பெற்ற தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி தொடங்கியது.

சிறப்பு பிரார்த்தனை

இதைத்தொடர்ந்து கிறிஸ்தவ ஆலயங்களில் கடந்த 6-ந் தேதி பெரிய வியாழன், 7-ந் தேதி புனித வெள்ளி பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் நள்ளிரவு உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை தொடங்கியது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள உலகப்பிரசித்திப்பெற்ற புனித ஆரோக்கியமாதா பேராலயத்திலும் ஈஸ்டர் பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

பாஸ்கா ஒளி

ஈஸ்டரை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு வேளாங்கண்ணியில் ஏசு உயிர்ப்பு பெருநாள் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. முன்னதாக இரவு 10.45 மணிக்கு வேளாங்கண்ணி பேராலய கலையரங்கில் ஈஸ்டர் திருநாள் பிரார்த்தனைகள் தொடங்கின. இதன் தொடக்கத்தில் பாஸ்கா ஒளி விழிப்பு சடங்கு நடந்தது. இதில் ஏசு உயிர்த்தெழுவதை உணர்த்தும் வகையில் பாஸ்கா ஒளி ஏற்றப்பட்டது.

கலையரங்க வளாகத்தின் மையப்பகுதியில் இருந்து ஏற்றப்பட்ட பாஸ்கா ஒளியை பேராலய அதிபர் இருதயதராஜ் அரங்கத்தின் மேடைக்கு எடுத்துச் சென்றார். பின்னர் பிரார்த்தனைகள் தொடங்கின. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி ஜெபம் செய்தனர்.

இரவு 11.40 மணி அளவில் பேராலய கலையரங்கின் மேற்கூரையில் இருந்து சிலுவை கொடியை கையில் தாங்கிய ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுவது போன்ற காட்சி தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது.

திருப்பலி

பின்னர் பேராலய அதிபர் இருதயதராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்கு தந்தைகள் டேவிட் தன்ராஜ், ஆட்டோ ஜேசுராஜ் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனைகளில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் பேராலயத்தை சுற்றி உள்ள பகுதிகளில் திரண்டிருந்தனர். ஈஸ்டர் திருநாளையொட்டி நேற்று பேராலயத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி பிரார்த்தனைகள் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு உயிர்த்த ஆண்டவரின் தேர் பவனியும், 7.45 மணிக்கு திவ்ய நற்கருணை ஆசிரும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

நாகை லூர்துமாதா ஆலயம், மாதரசி மாதா ஆலயம், சவேரியார் ஆலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று ஈஸ்டர் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் திரளான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். பின்னர் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.


Next Story