தஞ்சை கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு ஆராதனை
தஞ்சையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் சிறப்பு ஆராதனை நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்
தஞ்சையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் சிறப்பு ஆராதனை நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்
ஈஸ்டர் பண்டிகை
ஈஸ்டர்திருநாள் கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகையாகும். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏசு சிலுவையில் அறையப்பட்டு மரித்த பின் 3-ம் நாளில் உயிர்த்தெழும் நிகழ்வை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதனை கொண்டாட ஆண்டு தோறும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைபிடிப்பது வழக்கம். அதன்படி கடந்த பிப்ரவரி 22-ந்தேதி சாம்பல் புதன் முதல் கிறிஸ்தவர்கள் விரதம் மேற்கொண்டனர்.
பிரார்த்தனை
ஏசுவின் பாடுகளை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவர்கள் கடும் விரதம் இருந்து தேவாலயங்களில் பிரார்த்தனை செய்வார்கள். இந்த நிலையில் ஈஸ்டர் பண்டிகையையொட்டிநேற்று உலகம் முழுவதும் சிறப்பு ஆராதனை, திருப்பலி வழிபாடு நடந்தன.
தஞ்சையில் உள்ள திரு இருதய பேராலயத்தில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி, ஏசு உயிர்த்தெழும் காட்சி, தேர் பவனி உள்ளிட்டவை நடைபெற்றது.
கோட்டை கிறிஸ்து நாதர் ஆலயம்
தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே உள்ள சி.எஸ்.ஐ.கோட்டை கிறிஸ்துநாதர் ஆலயத்திலும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதன்படி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு உயிர்த்தெழுந்த திருநாள் ஆராதனை சபை ஆயர் பிரைட் பிராங்க்ளின் தலைமையில் நடந்தது. 9 மணிக்கு திருவிருந்து வழிபாடு நடைபெற்றது. வழிபாடு முடிந்தவுடன் சபை மக்கள் அனைவருக்கும் கேக் மற்றும் தேநீர் வழங்கப்பட்டது.
இதேபோல் தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பேதுரு ஆலயம், கருணாவதி நகரில் உள்ள துய அந்திரேயா ஆலயம், புதுக்கோட்டை சாலையில் உள்ள புனித அடைக்கல அன்னை ஆலயம், குழந்தை ஏசு ஆலயம், மங்களபுரத்தில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயம், வடக்குவாசல் அருளானந்தர் ஆலயம், மானம்புச்சாவடி சூசையப்பர் ஆலயம், அண்ணாநகர் செபஸ்தியார் ஆலயம், மாதாக்கோட்டை லூர்துமாதா ஆலயம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஈஸ்டர் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
வல்லம் தூயபவுல் ஆலயம்
தென்னிந்திய திருச்சபை திருச்சி- தஞ்சை திருமண்டலம் தூய அந்திரேயா ஆலய சேகரத்திற்கு உட்பட்ட வல்லம் தூய பவுல் ஆலயத்தில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் சபை குருவானவர் சார்லிபன் சாந்தகுமார் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தார். அதைத்தொடர்ந்து திருவிருந்து ஆராதனை நடந்தது. முன்னதாக தஞ்சை கருணாவதி நகர் தூய அந்திரேயா ஆலயம், களிமேடு தூய பேதுரு ஆலயம், ஆலக்குடி தூய யாக்கோபு ஆலயத்திலும் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான சபை மக்கள் கலந்து கொண்டனர்.
மொன்னையம்பட்டி ஆலயம்
இதேபோல் தஞ்சை மறைமாவட்டம் மொன்னையம்பட்டி ஆலயத்தில் ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் மொன்னையம்பட்டி பங்குத்தந்தை ஏ.ஆர். அல்போன்ஸ் தலைமையில் தஞ்சை மறைமாவட்ட முதன்மை குரு சுந்தரம், துறவறசபை அருட்தந்தை ஆரோக்கியராஜ், மற்றும் கிறிஸ்து அரசர் சபை கன்னியர்கள் கலந்துகொண்டனர்.