திருட்டு மின்மீட்டர் கொடுத்து ரூ.6 ஆயிரம் ேமாசடி
பல்லடம் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து வருவதாக கூறி திருட்டு மின்மீட்டர் கொடுத்து ரூ.6 ஆயிரம் ேமாசடி செய்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பல்லடம் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து வருவதாக கூறி திருட்டு மின்மீட்டர் கொடுத்து ரூ.6 ஆயிரம் ேமாசடி செய்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருட்டு மின் மீட்டர்
பல்லடம் கொசவம்பாளையம் ரோடு மாருதி நகரை சேர்ந்தவர் மணிகண்டன். அவருடைய வீட்டிற்கு புதிதாக மின் இணைப்பு பெறுவதற்கு மின்சார வாரியத்தில் மனு கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி மணிகண்டன் வீட்டிற்கு ஒருவர் வந்துள்ளார். அவர் மின்வாரியத்தில் இருந்து வருவதாகவும், மின் இணைப்பு வேலைகள் முடிந்து விட்டதாகவும், அதற்கான மின் கணக்கீடு மீட்டர் கொண்டு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். அதற்கான கட்டணமாக ரூ.6 ஆயிரம் எனக்கூறியுள்ளார். இதையடுத்து மணிகண்டன் ரூ.6 ஆயிரத்தை அவரிடம் கொடுத்து மின் மீட்டரை பெற்றுக் கொண்டார்.
2 நாட்கள் கழித்து மின் மீட்டர் மாட்டிக் கொள்ளலாம் என்று அவர் கூறியதை அடுத்து மணிகண்டன் கடந்த 30-ந் தேதி பல்லடம் மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு எப்போது மின் இணைப்பு தர வருவீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது மின்வாரிய அதிகாரிகள் உங்களது மனு தயாராகவில்லை எனக் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், மின் மீட்டரை எடுத்துக்கொண்டு பல்லடம் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று கேட்டபோது, அந்த மின் மீட்டர் திருட்டு மின் மீட்டர் என்பது தெரிய வந்தது.
போலீசில் புகார்
அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டது குறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது " மின்வாரியம் சம்பந்தமான அனைத்து கட்டணங்களும் இணையதளம் மூலம் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நேரில் பணம் வசூலிக்கப்படுவதில்லை. புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம், மின் மீட்டர் இடமாற்றம் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்குமான கட்டணங்கள் இணையதளம் மூலமாக மட்டுமே வசூலிக்கப்படுகிறது. எனவே இது போன்ற மோசடி நபர்களிடம் பொதுமக்கள் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்" என்றனர்.