மின் ஊழியர் மத்திய அமைப்பினர் போராட்டம்
மின் ஊழியர் மத்திய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டத்தில் புயல் உள்ளிட்ட பேரிடர் பாதிப்புகளில் இரவு, பகலாக சிரமப்பட்டு பணியாற்றிய ஒப்பந்த பணியாளர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தினக்கூலியாக ரூ.350-ஐ அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும். ஊதிய உயர்வு, வேலைப்பளு பேச்சுவார்த்தைகளில் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு திட்ட தலைவர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். திட்டத் துணைத் தலைவர் இளவரசன் முன்னிலை வகித்தார். திட்ட செயலாளர் கலைச்செல்வன் கலந்து கொண்டு பேசினார். மயிலாடுதுறை கோட்ட செயலாளர் மணிமேகலன், துணைத் தலைவர் சீனிவாசன் உள்பட திரளான மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்.