ஆணிக்காய் நோயால் ெகாய்யா விளைச்சல் பாதிப்பு
வத்திராயிருப்பு பகுதியில் ஆணிக்காய் நோயால் கொய்யா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு பகுதியில் ஆணிக்காய் நோயால் கொய்யா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
கொய்யா சாகுபடி
வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட எஸ்.ராமச்சந்திராபுரம், ரெங்கப்பநாயக்கன்பட்டி, சேசபுரம், வ.மீனாட்சிபுரம், வ.புதுப்பட்டி, கான்சாபுரம், அத்திகோவில், தாணிப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் கொய்யா சாகுபடி செய்துள்ளனர்.
இப்பகுதிகளில் விளையக்கூடிய கொய்யா மிகவும் சுவையானது என்பதால் இப்பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் எண்ணற்ற பேர் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
இந்தநிலையில் தற்போது கொய்யாவில் ஆணிக்காய் நோய் தாக்கி உள்ளது. இதனால் பறிக்கப்படும் கொய்யாவில் பாதிக்கும் மேற்பட்ட பழங்்கள் வீணாகி விடுகின்றன.
கிலோ ரூ.20
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
வத்திராயிருப்பு பகுதியில் எண்ணற்ற விவசாயிகள் கொய்யாவை சாகுபடி செய்துள்ளோம். தற்போது காய்களை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஒரு கிலோ கொய்யா ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு கொய்யாவை ஆணிக்காய் நோய் தாக்கி உள்ளது. பருவநிலை மாற்றத்தாலும், அளவுக்கு அதிகமாக பனி விழுவதாலும் தற்போது மகசூலிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சீசன் தற்போது தான் தொடங்கியுள்ளதால் இந்த நோயால் தங்களுக்கு பராமரிப்பு செலவு அதிகமாகி உரிய நேரத்தில் லாபம் ஈட்ட முடியாதநிலை நிலவுகிறது.
நிவாரணத்தொகை
இதனால் இந்த நோயால் பாதிக்கப்பட்ட காய்களை தவிர்த்து நல்ல விளைச்சல் உள்ள காய்களை மட்டும் வாங்கி செல்கின்றனர். இதனால் தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு தகுந்த அறிவுரை வழங்குவதுடன், நோய் தடுப்பு மருந்தையும் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.