தண்ணீர் திறப்பு எதிரொலி 63 அடியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம்
தண்ணீர் திறப்பு எதிரொலியால் வைகை அணை நீர்மட்டம் 63 அடியாக குறைந்தது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இதன் நீர்மட்டம், கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக முழுக்கொள்ளளவில் இருந்தது. இந்நிலையில் சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த வாரம் வைகை அணையில் இருந்து ஆற்றுப்படுகை வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு, தற்போது வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் கடந்த வாரம் 67.50 அடியாக இருந்த வைகை அணை நீர்மட்டம் தற்போது 63.68 அடியாக குறைந்துள்ளது. நாளை மறுநாள் வரை தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் மேலும் சரியும் நிலை உள்ளது.
இதற்கிடையே வருகிற 2-ந்தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் பாசனக்கால்வாய் வழியாக திறக்கப்பட உள்ளது. வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் போது நீர்மட்டம் மேலும் சரியும். எனவே இதை ஈடுசெய்யும் வகையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணை நீர்மட்டம் 63.68 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லை. அணையில் இருந்து வினாடிக்கு 1,072 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.