'தினத்தந்தி' செய்தி எதிரொலி: அங்கன்வாடி மையத்தின் பின்புறம் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றம்
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக அங்கன்வாடி மையத்தின் பின்புறம் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டது.
பெரம்பலூர் ஒன்றியத்துக்குட்பட்ட அம்மாபாளையம் கிராம ஊராட்சி 6-வது வார்டு ஏழு தென்னை மரத் தெருவில் அங்கன்வாடி மையத்தின் பின்புறம் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன. ஆனால் இந்த குப்பைகள் சரிவர அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. மேலும் குப்பைகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கும், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் தொற்று நோய் பரவும் அபாயம் இருந்து வந்தது.
இதையடுத்து, ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை உடனடியாக அகற்றவும், அந்த இடத்தில் குப்பைகள் கொட்டாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழ் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனைதொடர்ந்து அம்மாபாளையம் ஊராட்சி நிர்வாகம் அங்கன்வாடி மையத்தின் பிறன்புறம் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை உடனடியாக அகற்றி தூய்மைப்படுத்தினர். இதற்கு நடவடிக்கை எடுத்த ஊராட்சி நிர்வாகத்துக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் தங்களது நன்றியை தெரிவித்தனர்.