தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஈகோ பீஸ்ட் சர்வதேச மாநாடு
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஈகோ பீஸ்ட் சர்வதேச மாநாடு நடைபெற்றது.
வடவள்ளி
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் துறையின் 'ஈகோ பீஸ்ட் 23' ஆற்றல் மாற்றம் மற்றும் காலநிலை நடுநிலைமை பற்றிய சர்வதேச மாநாடு பல்கலைக்கழக அண்ணா அரங்கில் நடைபெற்றது. இந்த மாநாட்டை துணைவேந்தர் கீதாலட்சுமி தொடங்கி வைத்து, ஆற்றல் மாற்றம் மற்றும் காலநிலை நடுநிலைமையின் முக்கியத்துவம் குறித்து பேசினார். வேளாண் பொறியியல் கல்லூரியின் முதன்மையர் ரவிராஜ் வாழ்த்தி பேசினார்.
மாநாட்டில் கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், புவி வெப்பமயமாதலால் வேளாண்மையில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் அதன் உற்பத்தியில் உண்டாகும் பாதிப்புகள் குறித்து விளக்கி கூறினார். மாநாட்டின் மலர்களை சிறப்பு விருந்தினர்களும், பல்கலைக்கழக துணைவேந்தரும் இணைந்து வெளியிட்டனர்.மாணவர்கள் மாநாட்டு வளாகத்தை கழிவுகளிலிருந்து கலைநயத்துடன் புதுமையாக அலங்கரித்தனர் மற்றும் மாநாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருந்தன. முன்னதாக, மாணவர் அமைப்புச் செயலர் ஏஞ்சலா ஜெய்சன் வரவேற்று பேசினார். முடிவில் மாணவர் அமைப்பு செயலாளர் யோகேஷ்வர் நன்றி கூறினார்.