அமுதசுரபி அலுவலகங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை


அமுதசுரபி அலுவலகங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை
x
சேலம்

தமிழகம் முழுவதும் அமுதசுரபி என்ற பெயரில் கூட்டுறவு சங்கம் ெதாடங்கி ரூ.58 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, மாநிலம் முழுவதும் 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

கூட்டுறவு கடன் சங்கம்

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்தவர் ஜெயவேல் (வயது 67). இவர் தனது உறவினர்களான தங்கப்பழம், பிரேம் ஆனந்த், சரண்யா ஆகியோருடன் இணைந்து சேலம் அழகாபுரத்தில் அமுதசுரபி சிக்கன மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் என்ற கூட்டுறவு வங்கியை தொடங்கினார்.

இதன் மூலம் சேலத்தை சேர்ந்த ஏராளமானவர்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி முதலீடு திரட்டினார். தொடர்ந்து மாநிலம் முழுவதும் அமுதசுரபி பெயரில் சங்கங்களை தொடங்கினார். மேலும் தனியாக ஏ.டி.எம். கார்டுகளை வழங்கி வங்கிகள் முன்பு ஏ.டி.எம். மையத்தை ஏற்படுத்தினர்.

மோசடி புகார்

இந்த நிலையில், சேலம் அம்மாப்பேட்டை தங்கசெங்கோடன் தெருவை சேர்ந்த பாஸ்கரன் (52) என்பவர் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார்.

அதில் அமுதசுரபி நிறுவனத்தில் அதிக வட்டி அளிப்பதாக தான் முதலீடு செய்த நிலையில், வட்டி கொடுக்காமலும், முதிர்வு காலம் முடிந்து முதலீடு தொகை ரூ.2 லட்சத்து 92 ஆயிரம் வழங்காமலும் சங்க நிர்வாகிகள் மோசடி செய்ததாக புகார் தெரிவித்தார்.

சங்க தலைவர் கைது

அதன்பேரில் சங்கத்தின் தலைவராக செயல்பட்ட ஜெயவேல், இயக்குனர்களான தங்கப்பழம், பிரேம்ஆனந்த், சரண்யா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், மாநிலம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து ரூ.58 கோடி வரை அவர்கள் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதற்கிடையில் கடந்த பிப்ரவரி மாதம் சங்கத்தின் தலைவராக செயல்பட்ட ஜெயவேலை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக அமுதசுரபி கூட்டுறவு சங்கத்தில் கணக்காளராக பணியாற்றி வந்த எடப்பாடி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரும் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அதிரடி சோதனை

இந்த மோசடி வழக்கின் விசாரணை அதிகாரியாக சேலம் பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் நியமிக்கப்பட்டார். மாநிலம் முழுவதும் அமுதசுரபி கூட்டுறவு வங்கி 85 இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதில் ஏற்கனவே 20 இடங்களில் போலீசார் சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றினர்.

இந்த நிலையில் நேற்று காலை சேலம், தர்மபுரி, ஈரோடு, கோவை, கிருஷ்ணகிரி, திருச்சி என மாநிலம் முழுவதும் 21 இடங்களில் உள்ள அமுதசுரபி அலுவலகங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை செய்தனர். சேலம் தாதகாப்பட்டியில் உள்ள அமுதசுரபி கூட்டுறவு கடன் சங்கத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.

சொத்துகள்

இதேபோல சங்ககிரி, வாழப்பாடியில் உள்ள அமுதசுரபி அலுவலகங்களில் இன்ஸ்பெக்டர்கள் சித்ராதேவி, ராமானுஜம் ஆகியோர் தலைமையில் போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தினர். மோசடி செய்யப்பட்ட பணத்தில் சொத்துக்கள் எங்கெல்லாம் வாங்கப்பட்டு உள்ளன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனை நடந்த கூட்டுறவு சங்கங்களில் நேற்று பரபரப்பு நிலவியது.


Next Story