வீடுகள்-அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை
பணம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நிதி நிறுவன உரிமையாளர்களின் வீடு-அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
திருவையாறு:
பணம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நிதி நிறுவன உரிமையாளர்களின் வீடு-அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
நிதி நிறுவனம்
தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்த கண்டியூர் ரஹீம் நகரை சேர்ந்தவர் ஜாபர் அலி(வயது 58), அதே பகுதியை சேர்ந்தவர் முகமது அன்சாரி(55). இவர்கள் இருவரும் சேர்ந்து கண்டியூரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் சீட்டு போட்டால் மாதம் ரூ.3 ஆயிரம் வட்டி கொடுக்கப்படும் என அறிவித்தனர்.
இதை நம்பி திருவையாறு, கண்டியூர், அய்யம்பேட்டை, பாபநாசம், பண்டாரவடை போன்ற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
மாதம் ரூ.3 ஆயிரம் வட்டி
இந்த நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்த வாடிக்கையாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஒரு ஆண்டு மட்டும் கொடுத்து வந்தனர். அதன் பிறகு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பணம் செலுத்தியவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வட்டி கொடுக்கவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள், நிதி நிறுவனத்தில் கேட்டபோது அவர்கள் பணம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2019-ம் ஆண்டு புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார், ஜாபர்அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தலைமறைவாக இருந்த முகமது அன்சாரியை கடந்த 6-ந் தேதி தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து மதுரை சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வீடுகள்-அலுவலகத்தில் சோதனை
இந்த நிலையில் நேற்று கண்டியூர் ரஹீம் நகரில் உள்ள ஜாபர் அலி வீடு மற்றும் அவரது மகன், மகள் வீடுகள், முகமது அன்சாரி வீடு மற்றும் அவர் நடத்தி வந்த கட்டுமான அலுவலகத்தில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுதா(தஞ்சை), செல்வி(புதுக்கோட்டை), கவுசர்நிஷா, கயல்விழி(திருச்சி) ஆகியோர் சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் சில ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை போலீசார் எடுத்து சென்றனர்.
பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நிதி நிறுவன உரிமையாளர்கள் வீடு, அலுவலகங்களில் போலீசார் சோதனை நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.