முகநூலில் குடும்ப புகைப்படத்தை பதிவிட்டுஎடப்பாடி வாலிபரிடம் பணம் கேட்டு மிரட்டல்தூத்துக்குடியை சேர்ந்தவர் கைது
முகநூலில் குடும்ப புகைப்படத்தை பதிவிட்டு எடப்பாடி வாலிபரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த தூத்துக்குடியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
சேலம்,
சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 25). இவர், வாட்ஸ்-அப்பில் முகப்பு புகைப்படமாக (டி.பி.) தனது குடும்ப புகைப்படத்தை வைத்திருந்தார். அதனை ஒருவர் எடிட் செய்து அவதூறாக முகநூலில் (பேஸ்புக்) பதிவிட்டு அதனை நீக்க பணம் கேட்டு மிரட்டுவதாகவும், எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுக்கூறி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு செல்லபாண்டியன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கைலாசம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில், கார்த்திக்கிடம் பணம் கேட்டு மிரட்டியது, தூத்துக்குடி மாவட்டம் குமரகிரி பகுதியை சேர்ந்த சரத்குமார் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர் இதுபோன்று பல நபர்களிடம் மிரட்டி பணம் பெற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்களின் புகைப்படங்களை தேவையின்றி வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும், ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்துவிட்டால் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930-ஐ தொடர்பு கொண்டு புகார் அளித்தால் இழந்த பணத்தை மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்லபாண்டியன் தெரிவித்துள்ளார்.