எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றை தலைமை வேண்டும்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றை தலைமை வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்.
திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. கூட்டம் வாணியம்பாடியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் நடைப்பெற்றது. மாவட்ட அவைத்தலைவர் புஷ்பநாதன், மாவட்டத் துணை செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டம் முழுவதும் இருந்து அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றை தலைமை வேண்டும் எனவும், எடப்பாடி பழனிசாமிதான் அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்று நடத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி கூறியதாவது:-
மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் ஒருமனதாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அ.தி.மு.க.வை பிளவுபடுத்தி பார்க்க தி.மு.க. நினைக்கிறது. அதற்காக தொந்தரவு கொடுத்து பின்னாலிருந்து செயல்படுகிறது. அது ஒரு போதும் நடக்காது.
கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஒ.பன்னீர் செல்வமும், பழனிசாமிக்கு ஆதரவு வழங்குவார். மேலும் தற்போது ஒற்றை தலைமையின் அவசியம் ஏற்பட்டுள்ளது. இரட்டை தலைமையில் இருந்தால் ஒருவருடைய முடிவை மற்றொருவர் ஏற்கமாட்டார். இது எதிரிகளுக்கு சாதகமாக இருக்கும். இதற்கு ஒற்றை தலைமைதான் அவசியம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் ஜி.செந்தில்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கோவி.சம்பத்குமார், கே.ஜி.ரமேஷ், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் மற்றும் பிற அணி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.