தமிழகத்தின் உரிமையை எடப்பாடி பழனிசாமியால் மீட்டெடுக்க முடியும்
தமிழகத்தின் உரிமையை எடப்பாடி பழனிசாமியால் மீட்டெடுக்க முடியும் என அ.தி.மு.க. மாநாட்டில் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
மதுரை
தமிழகத்தின் உரிமையை எடப்பாடி பழனிசாமியால் மீட்டெடுக்க முடியும் என அ.தி.மு.க. மாநாட்டில் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
வைகை நதிக்கரையில்...
அ.தி.மு.க. பொன் விழா எழுச்சி மாநாடு, மதுரை வலையங்குளம் ரிங்ரோட்டில் நேற்று நடந்தது. மாநாட்டினை, எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது கூறியதாவது:-
சீரோடும். சிறப்போடும். எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை வைகை நதிக்கரையில் அமர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. சித்திரை திருவிழாவை இந்த மதுரை கண்டிருக்கிறது.
கள்ளழகர் ஆற்றில் இறங்கிய போது கள்ளழகரை வரவேற்கும் மக்களைதான் இந்த மதுரை மண் கண்டிருக்கிறது. நம்மை வாழ வைப்பதற்காக தன்னை அர்ப்பணித்த எடப்பாடி பழனிசாமியை வருக, வருக என வரவேற்கிறேன். மதுரையே முதன் முதலாக உங்களால் இங்கு சங்கமித்து இருக்கிறது. உலகத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் அடிமை விலங்கை உடைத்து சுதந்திர காற்றை சுவாசிக்க வைத்தார்.
தமிழக உரிமை
நாட்டில் உள்ள முட்களை அகற்றி மலர்களை மலர செய்தார். அவர் ஆற்றிய ஒரு வரலாற்று உரை தான் மீண்டும் அவரை அமெரிக்க அதிபராக அமர வைத்தது. மீனாட்சி அம்மன் குடி கொண்டுள்ள இந்த மதுரை மண்ணிலே எடப்பாடி பழனிசாமி ஆற்றும் உரை தமிழகத்தில் மீண்டும் அவரை ஆட்சியில் அமர்கிற காட்சியாக அமையும். சம தர்மத்தின் அடையாளமாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இங்கு அமைக்கப்பட்டுள்ள 52 அடி உயர கொடியினை எடப்பாடி பழனிசாமி ஏற்றுவதற்கு 5 மணி நேரம் ஆகியது. இதை நாடே கண்டு வியந்தது.
இந்த கழக கொடி ஏற்றிய அவர் விரைவிலே சென்னை ஜார்ஜ் கோட்டையிலே முதல்-அமைச்சராக கொடி ஏற்றுவார். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் நாடு அழிந்து கொண்டிருக்கிறது. தமிழ் இனம் அழிந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தின் உரிமை அழிந்து கொண்டிருக்கிறது. அதனை மீட்டெடுக்கக்கூடியவர் எடப்பாடி பழனிசாமி தான்.