எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
எடப்பாடி பழனிசாமி இன்று(வியாழக்கிழமை) மதுரை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
எடப்பாடி பழனிசாமி இன்று(வியாழக்கிழமை) மதுரை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
வரவேற்பு
அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் எடப்பாடி பழனிசாமி, முதன் முறையாக தென்மாவட்டங்களுக்கு வருகிறார். அதற்காக அவர் இன்று(வியாழக்கிழமை) காலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கு அவரை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு கொடுக்கின்றனர்.
இந்த வரவேற்புக்கு பின், எடப்பாடி பழனிசாமி கார் மூலம் சிவகாசி புறப்பட்டு செல்கிறார். அங்கு காலை 10 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து மாலை 4 மணிக்கு மதுரைக்கு புறப்படுகிறார்.
பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
மதுரை பழங்காநத்தம் ரவுண்டானாவில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் மதுரை மாநகர் மாவட்டம், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சார்பாக அ.தி.மு.க.தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பின் எடப்பாடி பழனிசாமி விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
ஏற்பாடுகள்
மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை அ.தி.மு.க. மதுரை மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு என 3 மாவட்டங்கள் உள்ளன. கடந்த காலங்களில் எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு வரும் போது தனித்தனியாக தான் வரவேற்பும், நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். ஆனால் இந்த முறை 3 மாவட்டமும் இணைந்து இந்த பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோர் ஒன்றிணைந்து சிறப்பாக பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து உள்ளனர். இவர்களுடன் சேர்ந்து முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம்விஸ்வநாதன் ஆகியோர் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடையை நேற்று பார்வையிட்டனர்.