சமையல் எண்ணெய் இறக்குமதி வரிச்சலுகை மேலும் 6 மாதத்துக்கு நீட்டிப்பு
மத்திய அரசு சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரிச்சலுகையை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரிச்சலுகையை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
வரிச்சலுகை
மத்திய அரசு உலக சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்த நிலையில் உள்ளூர் சந்தையிலும் சமையல் எண்ணெய் விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவை பொருத்தமட்டில் சமையல் எண்ணெய் தேவையில் 70 சதவீதம் இறக்குமதியை நம்பி உள்ள நிலை நீடிக்கிறது. பாமாயில் இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்தும், சூரியகாந்தி எண்ணெய் அர்ஜென்டினா, உக்ரைன் ஆகிய நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் மத்திய அரசு இறக்குமதி எண்ணெய் வகைகளுக்கு வரி விதிப்பில் இருந்து விலக்களித்து உத்தரவிட்டிருந்தது.
பலன் தராது
தற்போது இந்த வரி விலக்கு சலுகையினை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வருகிற 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த சலுகை அமலில் இருக்கும். ஆனாலும் இந்த சமையல் எண்ணெய்களுக்கு வேளாண் செஸ்வரி விதிப்பு அமலில் இருக்கும். இந்நிலையில் மத்திய அரசு, உள்ளூர் சமையல் எண்ணெய் விற்பனையாளர்கள் கிலோவுக்கு ரூ. 15 வரை விலையில் குறைக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
ஆனால் சமையல் எண்ணெய் வணிக வட்டாரத்தினர் உற்பத்தி மற்றும் தேவை அடிப்படையில் தான் விலை நிர்ணயம் செய்ய முடியுமே தவிர திடீரென விலையில் கிலோவுக்கு ரூ.15 குறைப்பது என்பது சாத்தியமில்லை என தெரிவித்தனர். எனவே மத்திய அரசின் இந்த அறிவிப்பு சமையல் எண்ணெய் உள்ளூர் விலையில் எதிர்பார்த்த பலனை தரவில்லை.