2 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது


2 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது
x

குமரி மாவட்டத்தில் 2 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நேற்று முதன்மைக்கல்வி அதிகாரி புகழேந்தி மேற்பார்வையில் தொடங்கியது.

கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் 2 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நேற்று முதன்மைக்கல்வி அதிகாரி புகழேந்தி மேற்பார்வையில் தொடங்கியது.

விடைத்தாள் திருத்தும் பணி

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி இம்மாதம் 3-ந் தேதி வரை நடந்தது. குமரி மாவட்டத்தில் இந்த தேர்வை 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினார்கள்.

தேர்வு முடிந்ததையொட்டி நேற்று தமிழகம் முழுவதும் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. இதற்காக குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் எஸ்.எம்.ஆர்.வி. பள்ளியிலும், படந்தாலுமூடு திருஇருதய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல்நாளான நேற்று முதன்மை தேர்வாளர்களும், கூர்ந்தாய்வு அலுவலர்களும் அனைத்து பாடங்களுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணியை மேற்கொண்டார்கள். தலா 150 பேர் வீதம் 2 மையத்திலும் 300 பேர் இந்தப் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக நாகர்கோவில் எஸ்.எம்.ஆர்.வி. பள்ளியில் விடைத்தாள் திருத்தும் தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி புகழேந்தி ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

1500 பேர்

இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் உதவி தேர்வாளர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள இருக்கிறார்கள். தலா 350 முதல் 400 உதவி தேர்வாளர்கள் வீதம் 2 மையங்களிலும் 800 பேர் வரை விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். பாடத்துக்கு ஏற்ப விடைத்தாள் திருத்தும் உதவி தேர்வாளர்களின் எண்ணிக்கை கூடுதலாகவும், குறைவாகவும் இருக்கும். அதிகபட்சமாக 2 மையங்களிலும் 1500 பேர் வரை விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள இருக்கிறார்கள். நேற்று 2 முகாம்களிலும் நடைபெற்ற விடைத்தாள் திருத்தும் பணியை முதன்மைக்கல்வி அதிகாரி புகழேந்தி நேரில் பார்வையிட்டார்.

வருகிற 20-ந் தேதி வரை பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும். அதைத்தொடர்ந்து பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் என்று மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி புகழேந்தி கூறினார்.


Next Story