130 மாணவ-மாணவிகளுக்கு ரூ.4 கோடியே 55 லட்சம் கல்விக்கடன்
130 மாணவ-மாணவிகளுக்கு ரூ.4 கோடியே 55 லட்சம் கல்விக்கடன்
திருப்பூர்
கல்விக்கடன் வழங்கும் சிறப்பு முகாம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. முகாமை திருப்பூர் பாராளுமன்ற தொகுதி சுப்பராயன் எம்.பி. தொடங்கி வைத்தார், ஈரோடு தொகுதி கணேசமூர்த்தி எம்.பி., கலெக்டர் வினீத், மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் ஆகியோா் முகாமில் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர் செய்திருந்தார். முகாமில் 281 மாணவ-மாணவிகள் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தனர். அவர்களில் உரிய ஆவணங்களை கொடுத்த 130 பேருக்கு ரூ.4 கோடியே 55 லட்சம் கல்விக்கடன் வழங்குவதற்கான ஒப்புதல் ஆணை வழங்கப்பட்டது. மீதம் உள்ளவர்கள் ஒரு சில ஆவணங்கள் இல்லாமல் இருந்தனர். அவர்களும் தகுந்த ஆவணங்களை கொடுக்கும்போது கல்விக்கடன் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று(வியாழக்கிழமை) இரண்டாவது நாளாக கல்விக்கடன் வழங்கும் சிறப்பு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இந்த முகாமை மாணவ-மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.